லாரி உரிமையாளர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. சுங்க சாவடிகளில் தற்போது நிலவுகிற நடைமுறை சிக்கலை களைந்து வாகனங்கள் கடந்து செல்வதற்கான முறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடு முழுவதும் சுங்க கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் கடந்த 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிற இந்த போராட்டத்தினால் 87 லட்சம் லாரிகள் ஓடாமல் முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 4 நாட்கள் போராட்டத்தில் லாரி உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் கோடி இழப்பும், மத்திய அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
நாடு முழுவதும் லாரிகள் ஓடாததால் பால், குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதோடு, காய்கறி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் மட்டும் 3 கோடி முட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் தென்னிந்திய தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பினர் மக்கள் நலனுக்காக லாரிகளை தொடர்ந்து இயக்குவோம் என அறிவித்திருந்தாலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு தவறிவிட்டது. இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. எந்த பிரச்சினை எடுத்தாலும் கடிதம் எழுதுவதோடு தமது பணி முடிந்துவிட்டதாக கருதுகிற ஜெயலலிதா, இப்பிரச்சினையிலும் கண்டும் காணாமல் இருந்து வருகிறார். தமிழக மக்களை வெகுவாக பாதிக்கிற இப்பிரச்சினையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அலட்சியப் போக்கு மிகுந்த கண்டனத்திற்குரியது.
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிற இப்பிரச்சினையில் லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகத் தீர்வு காண உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினையில் காலம் தாழ்த்துவதன் மூலமாக பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் ஏற்பட்டு நமது பொருளாதாரத்தையே பாதித்து விடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
மேலும், சுங்க சாவடிகளில் லாரிகள் காத்திருக்கும் போது தேவையில்லாத காலவிரயமும், எரிபொருளும் வீணாகிறது என்கிற லாரி உரிமையாளர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. மேலை நாடுகளில் உள்ளது போல் குறைந்த கட்டணத்தை நிர்ணயம் செய்து அதற்கான அனுமதி அட்டையை வழங்க வேண்டும். சுங்க சாவடிகளில் தற்போது நிலவுகிற நடைமுறை சிக்கலை களைந்து வாகனங்கள் கடந்து செல்வதற்கான முறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment