ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் 6 மந்திரிகளும் உடன் வந்தனர்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அவரை பிரதமர் நரேந்திரமோடி வரவேற்றார். அவருக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் மெர்க்கெலுக்கு சம்பிரதாய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்புக்கு பிறகு ஏஞ்சலா மெர்க்கெல் கூறும் போது, பொருளாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜெர்மனிக்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதை தொடர்ந்து ஐதராபாத் இல்லத்துக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சென்றார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினார்கள். இரு நாடுகள் இடையேயான வர்த்தக தொடர்பு பற்றியும் இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. பாதுகாப்பு, கல்வி, புதுப்பிக்கதக்க எரிசக்தி, உயர் தொழில் நுட்பம், திறன்மேம்பாடு, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
இதன் பிறகு ஏஞ்சலா மெர்க்கெல், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார்.
நாளை, அவர் பெங்களூர் செல்கிறார். நாஸ்காம் என்னும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள வர்த்தக நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் மோடியும் இதில் கலந்து கொள்கிறார்.
No comments:
Post a Comment