Thursday, 1 October 2015

இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவை: அன்புமணி ராமதாஸ் பேச்சு


இலங்கை தமிழர்களுக்கு சரியான நீதி கிடைக்க பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்ற விசாரணை தேவை என்று ஐ.நா.சபையில் பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவைக்கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
மனித உரிமை ஆணையர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமானால், உள்நாட்டு நீதிமன்ற விசாரணைக்கு மேலான விசாரணை அமைப்பு தேவையாகும்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று இலங்கை திட்டவட்டமாக கூறிவிட்டது. இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத வகையில் கூட்டுத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை மனதில் கொண்டு, போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு விடப்பட்டுள்ள இந்த சவாலை சமாளிக்க சரியான நடவடிக்கை தேவைப்படுகிறது.
போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு, அதன் குற்றங்கள் குறித்து விசாரித்து தீர்ப்பளிக்க தார்மீக உரிமை கிடையாது. இலங்கையில் புதிதாக பதவியேற்ற அரசு கூட மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை.
உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களாக இலங்கைத் தமிழர்கள் இன்னும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ் கிராமங்களில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் தொடர்கின்றன. தமிழ் மக்கள் இன்னும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்ற விசாரணை கோரி ஐ.நா. மனித உரிமை பேரவையில் வலிமையான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வர வேண்டும் என்று கோரி  செப்.15 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் பன்னாட்டு விசாரணை கோர வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு அமைதி காப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வசதியாக பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடைமுறையையும், பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கான அமைப்பையும் ஏற்படுத்தும்படி சர்வதேச சமுதாயத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment