தருமபுரி மாவட்டம் பென்னகரம் வட்டம் நலப்பரம்பட்டி அருகே உள்ள குட்டையில் மூழ்கி 5 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நலப்பரம்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன். அவரது மனைவி சுமதி. இவர்களது மகள்கள் அஞ்சலி (16), ஹரிணி (9). இருவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் முறையே 11 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சேகர் - முனியம்மாள் தம்பதியினர். இவர்களது பிள்ளைகள் ராஜேஸ்வரி (14), புவனேஸ்வரி (14). இவர்கள் இருவரும் இரட்டையர். சுப்பிரமணி - தேன்மொழி மகள் சரிதா. வயது 7.
இந்தச் சிறுமிகள் 5 பேரும் இன்று காலையில் பூமரத்துப்பள்ளம் தடுப்பணைக்கு அருகே உள்ள குட்டைக்குச் சென்றுள்ளனர். துணி துவைப்பதற்காக அவர்கள் அங்கு சென்றதாகத் தெரிகிறது.
அப்போது இவர்களில் ஒருவர் குளிப்பதற்காக குட்டையில் இறங்கியுள்ளார். அவர் இறங்கிய பகுதியில் சேறு அதிகமாக இருந்ததால் அதில் சிக்கிக் கொண்டுள்ளார். அவரது உதவிக்குரல் கேட்டு மற்ற நால்வரும் உதவிக்குச் சென்றனர். ஆனால், அடுத்தடுத்து 4 பேரும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். ஐந்து பேரும் சிக்கிக் கொள்ளவே ஏரிக்கரையில் இருந்த வேறு 4 சிறுமிகள் உதவிக்குச் சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்களும் சேற்றில் சிக்கினர். இருப்பினும், அவர்கள் நால்வரும் எப்படியோ தத்தளித்து மேலே வந்துவிட்டனர்.
இதனைக் கண்ட ஏரிக்கரையில் இருந்து மற்ற சிறுவர்கள், சிறுமியர் ஊருக்குள் சென்று ஆட்களை உதவிக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், அதற்குள் அந்த 5 பேரும் சேற்றில் சிக்குண்டு மூச்சுத் திணறி பலியாகினர்.
பின்னர் ஊரார் 5 சிறுமிகளின் உடலையும் மீட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் சடலங்களை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
ஒரே நாளில் ஒரே பகுதியைச் சேர்ந்த ஐந்து சிறுமிகள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தொடர்கதையாகும் சோகம்
தருமபுரியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இது போன்ற சோகச் சம்பவங்கள் நிகழ்வது தொடர்கதையாக இருக்கிறது. குவாரிகளிலும், குளம், குட்டைகளிலும் நிறையும் தண்ணீரில் சிறுவர்கள் இவ்வாறு சிக்கி பலியாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.
எனவே, குவாரியில் தேங்கியிருக்கும் தண்ணீர், ஏரி, குளம், குட்டை பகுதிகளில் குழந்தைகளை அனுமதிப்பதில் பெற்றோர்களே கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment