Monday, 12 October 2015

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க தடை விதித்து உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி நன்றி!!




தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க  தடை விதித்து உத்தரவிட்ட  தமிழக முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!! என தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு தடை விதித்து விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் நிம்மதி ஏற்படச் செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகளில் கர்நாடகாவின் வஞ்சகத்தால் பயிர்சாகுபடி என்பதே கேள்விக்குறியாகிப் போன ஒன்றாகிவிட்டது. இதற்கு ஒரு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

ஆனால் ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டாவையே பாலைவனமாக்கிவிடும் வகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கப் போகிறோம்.... பாறை எரிவாயு எடுக்கப்போகிறோம் என்று விவசாய விளைநிலங்களை கபளீகரம் செய்ய ராட்சத இயந்திரங்களை களமிறக்கியது மத்திய அரசு. இதற்கு எதிராக கட்சி, ஜாதி பாகுபாடுகள் இல்லாமல் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் களமிறங்கி பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டங்களின் முன்னோடியாக மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் திகழ்ந்தார். விவசாயிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய ஒரு ஆய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டிருந்தார்

இந்த ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று தற்போது,

காவிரி டெல்டா பகுதியில் சுமார் 691 கி.மீ. பரப்பில், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மீத்தேன் திட்டத்துக்கு, தமிழக அரசால் எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படாது

காவிரி டெல்டா பகுதியில், நிலக்கரிப்படுகை மீத்தேன் எரிவாயு வெளிக் கொணர்தல் மற்றும் உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட வேண்டும்;

எதிர்காலத்தில் இது போன்ற எவ்விதமான முயற்சியையும் தொடங்குவதற்கு முன்னர் தமிழக அரசை மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும்

என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருப்பது காவிரி டெல்டா விவசாயிகளை நிம்மதிப் பெருமூச்சுவிட செய்துள்ளது.

ஏற்கெனவே விளைநிலங்கள் வழியே கெயில் நிறுவனமானது எரிவாயு குழாய்களை பதிக்க முயற்சித்த போது தமிழக அரசு திடமுடன் அத்திட்டத்தை செயல்படுத்த தடை விதித்தது; தற்போதும் அதேபோல் மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கு தடை விதித்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொடுத்துள்ளது தமிழக அரசு.


இத்தகைய உறுதியான நடவடிக்கையை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சார்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment