Friday, 9 October 2015

தமிழக பெண்ணின் கையை துண்டித்தவர் மீது நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியாவிடம் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தல்


வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பொன்னை அருகேயுள்ள மூங்கில் ஏரி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம்(வயது 55). 3 மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலை பணிக்காக சவுதி அரேபியா சென்ற இவர் ரியாத் நகரில் தனது முதலாளியால் பட்டினி போட்டு துன்புறுத்தப்பட்டார்.

இதனால் உள்ளூர் அதிகாரிகளிடம் கஸ்தூரி முறையிட்டதால் ஆத்திரமடைந்த அவருடைய முதலாளி கடந்த 7-ந்தேதி அவருடைய வலது கையை முற்றிலுமாக துண்டித்தார். தற்போது கஸ்தூரி ரியாத் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக பெண்ணின் கையை துண்டித்த சம்பவத்தை இந்திய அரசும் வன்மையாக கண்டித்து உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், “இந்திய பெண்ணின் கையை துண்டித்த மிருகத்தனமான இந்த செயலால் நாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்து இருக்கிறோம். இதனை ஏற்க இயலாது. இந்திய பெண்ணின் கையை துண்டித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சவுதி அரேபிய அரசிடம் இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது” என்று குறிப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து மும்பையில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து, மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.கே. சிங் கூறும்போது “தவறாக வழிகாட்டும் ஏஜெண்டுகளை நம்பி யாரும் வெளிநாடுகளுக்கு வேலைதேடி செல்லவேண்டாம். இப்படி போகிறவர்கள் அந்த நாடுகளின் சட்டங்களை அறிந்து கொள்வதில்லை. இக்கட்டான நேரங்களில் என்ன செய்வது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. எனவே வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அங்கீகாரம் பெற்ற ஏஜெண்டுகளின் உதவியுடன் மட்டுமே வெளிநாட்டில் வேலைக்கு செல்லவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க இயலும்” என்றார்.

No comments:

Post a Comment