கரூர் மாவட்டத்தில் 2–வது நாளாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மறுமலர்ச்சி பிரசார பயணம் மேற்கொண்டார். கரூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற பிரசாரத்தின் போது வைகோ பேசியதாவது:–
அண்ணா தொடங்கிய தி.மு.க.வை கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் அழித்து விட்டனர். அதில் இருந்து உருவான அ.தி.மு.க. வும் மதுவை கொடுத்து மக்களை அழித்து வருகிறது. ம.தி.மு.க. தமிழ் மக்களுக்காக நாளும் பேராடுகிறது.
தமிழக மக்களுக்கு யார் துன்பம் செய்தாலும் விடமாட்டோம். தி.மு.க.வுடன் ஏன் கூட்டணி சேரக்கூடாது என சிலர் கேட்கிறார்கள். 1 லட்சத்து 76 ஆயிரம்கோடி ஊழல் செய்த கட்சியுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டுமா?.
ம.தி.மு.க.வில் இருந்து விலகிய மாசிலாமணி, சோமு, பரணிமணி போன்றவர்களுக்கு முகவரி கொடுத்தது யார்? இந்த ம.தி.மு.க.என்ற இயக்கம்தானே.
யாரையும் நம்ப வைத்து கழுத்தை அறுக்க கூடாது. இப்போது ரேட்டு கூடியிருப்பதால் அங்கு (தி.மு.க.) சென்றிருக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான தொண்டர்களால் உருவான இந்த இயக்கம் வீறுகொண்டு எழும். விலகி சென்றவர்கள் வீணாக போய்விட்டார்கள்.
தி.மு.க. ஊழல் கட்சி என்றால், அ.தி.மு.க. அதைவிட ஊழல் கட்சியாக உள்ளது. அவர்கள் துண்டு, துண்டாக நிலத்தை அபகரித்தார்கள். இவர்கள் 500, ஆயிரம் ஏக்கர் என அபகரிக்கிறார்கள். 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ராசாவும், கனிமொழியும் மட்டும்தான் குற்றவாளிகளா? ஒட்டுமொத்த குடும்பமும் குற்றவாளி இல்லையா?
நேர்மையான ஊழலற்ற அரசியலை தமிழகத்தில் கொண்டு வருவதே ம.தி.மு.க. வின் லட்சியம். மக்கள் நல கூட்டியக்கம் நிரந்தரமானது. ஜோதிபாசு அமைத்தது போன்று மக்கள் நல கூட்டியக்கமும் நிரந்தரமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் இந்த இயக்கத்தில் பல கட்சிகள் சேரலாம். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கம் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
பிரசாரத்தின் போது முன்னாள் எம்.பி. கணேச மூர்த்தி உடனிருந்தார். மேலும் கரூர் மாவட்ட பொருளாளர் ஆர்த்தியா பொன்னுசாமி, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர் ஈழபாரதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆசை சிவா, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன், தாந்தோன்றி நகர செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட கரூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
No comments:
Post a Comment