திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்து சென்றவர்களின் பூணூலை அறுத்ததாகக் கூறி 6 பேர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் 7.10.2015 அன்று ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் - மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி சாலையில் நடந்து சென்றவர்களின் பூணூலை அறுத்ததாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சிலர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்குகளில் கைதான இராவணன், திவாகர், கோபிநாத், பிரதீப், நந்தகுமார் ஆகியவர்களான 6 பேரை
குண்டர் - தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் மே 13ஆம் தேதி (2015) உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கண்ட 6 பேர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
குண்டர் சட்டம் செல்லாது - நீதிபதிகள் பிறப்பித்த நியாய தீர்ப்பு!
நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், சி.டி. செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு, விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:
1. கைதுக்கான சம்மன், கைது குறித்த தகவல், சிறையில் அடைப்பதற்கான நகல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது முறையற்றது.
2. சட்ட, நடைமுறைகளைப் பின்பற்றாமலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான குற்றவாளிகள் என்பதற்கான ஆவணங்களும், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.
3. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு தாமதமாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்திட சென்னை மாநகரக் காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து (Quash) செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது! இது ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து முழுக்க முழுக்க சட்ட விதிகளின் அடிப்படையில் தரப்பட்ட நியாயத் தீர்ப்பு - நல்ல தீர்ப்பு! வரவேற்கத்தக்கது.
வன்முறைமீது கழகத்திற்கு நம்பிக்கை இல்லை
ஏப்ரல் முதல் இத்தீர்ப்பு நாள்வரை இவர்கள்மீது இ.பி.கோ. பிரிவின் கீழும் மற்ற சட்டவிதிகளின் கீழும் போடப்பட்ட வழக்கு அப்படியே நிலுவையில் இருக்கும்.
அவர்கள் ஜாமீனில் வந்தோ, சிறையில் இருந்தோ வழக்குகளை நடத்தும் வாய்ப்பும், உரிமையும் பெற்றுள்ளனர்!
வன்முறை, தனி மனித தாக்குதல் - இவைகளை என்றும் நமது இயக்கம் ஆதரிக்காது என்பது உலகம் அறிந்த நடைமுறை. இவர்கள்தான் குற்றவாளிகளா என்பது இனி வழக்கு விசாரணையில் முடிவு ஆக வேண்டிய ஒன்று.
பூணூல் அறுப்பு நடந்தது ஏன்?
என்றாலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் - பூணூல் அறுப்புகள் - ஏன் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது என்பதை, ‘நோய் நாடி நோய் முதல் நாடும்’ வகையில் நடு நிலையாளர்களும், நீதிக்குத் தலை வணங்குவோரும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறையினரும் உணர வேண்டாமா?
ஒரு தொலைக்காட்சியில் தாலி பற்றிய விவாதமே நடைபெறக் கூடாது; என்று அவர்களை வன்முறை மூலம் மிரட்டியதும், மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று கூறுவதும் உண்ணும் (அடிப்படை) உரிமையைப் பறிப்பதாகாதா? மனித உரிமைகளைப் பறிக்கும் செயல் இது அல்லவா? அற வழியில் அரங்குக்குள் பெரியார் திடலில் நடத்தவிருந்த நிகழ்ச்சியை எதிர்த்து இந்துத்துவ பார்ப்பனீய அமைப்புகளும், அவர்களின் எடுபிடிகளும் நடத்திய வன்முறை வெறியாட்டம் ஒருபுறம்; பொறுப்பாளராக ஒரு பா.ஜ.க. பார்ப்பனப் பேர் வழியும், அவ்வமைப்பின் அகில இந்திய செயலாளரும்; அவரது ஆதரவாளர்களும் தந்தை பெரியார் படத்தை எரித்தனரே அசிங்கப்படுத்தினரே! தாலியை அகற்றிக் கொண்ட பெண்களைப் பற்றி பொது மேடையில் வள்ளுவர் கோட்டம் அருகில் - காவல் துறையினர் முன் அனுமதியோடும், சாட்சியோடும் ஆபாசமாகப் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரம் திசை மாறிச் சென்றது Grave and sudden Provocation என்பது சட்டச் சொல்லாகும்! அதுதானே இது?
பெரியாரை அவமதித்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அவர்கள்மீது இன்று வரை - சென்னை நகரக் காவல் ஆணையரிடம் புகார்களை பல அமைப்புகள் கொடுத்தும் இதுவரை அந்தப் புகார்கள் ஊறுகாய் ஜாடியில்தானே கிடக்கின்றன!
அதன் எதிர்வினையாகத்தானே ஆத்திரப்பட்டவர்கள் யாரோ பூணூலை அறுத்தனர்? அதை நாம் நியாயப்படுத்திக் கூறவில்லை. அதன்மீது உடனடியாக சம்பந்தப்பட்ட ஹிந்துத்துவவாதிகள்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் இது நடக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காதே! இப்போது என்ன ‘எமர்ஜென்சியா - நெருக்கடியா நடைபெறுகிறது?
தன்னிச்சை போல, ‘தானடித்த மூப்பாக’ இப்படி சென்னை நகரக் காவல்துறை - ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக நடந்து - மேலே உள்ளவர்களைத் திருப்திப்படுத்தவோ என்னவோ சட்ட விரோத (Illegal detention) மாக 6 இளைஞர்களை - பல மாதங்களாகக் குண்டர்கள் சட்டத்தின் கீழ் வைத்தது. அவர்களுக்கு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும்? அவர்களின் பல்வேறு விதமான இழப்புகளுக்கு யார் பொறுப்பு?
மனித உரிமை ஆணையம் இதனை கவனித்து, தானே முன்வந்து நீதியைப் புறந்தள்ளியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமை அமைப்புகள் வாய்மூடி மவுனம் சாதித்தால், நாளை இத்தகைய சட்ட துஷ்பிரயோகம் எல்லோரையும் பதம் பார்க்கும் என்பதை மறந்து விட வேண்டாம்!
தந்தை பெரியார் யார்?
1. தேசியத் தலைவர் என்பதால் ஆர்.எஸ்.எஸ். அங்கம் வகித்த மத்திய ஜனதா அரசினால் நூற்றாண்டு விழா சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டு பெரியார் கவுரவப்படுத்தப்பட்டார் அல்லவா?
2. அதற்குமுன் அய்.நா.வின் ‘யுனெஸ்கோ’ விருதினை மத்திய, மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டு அளித்துப் பெருமைபடுத்தப்பட்ட பெம்மான் அல்லவா பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்.
3. அவரது 125ஆம் ஆண்டு பிறந்த நாளில் சிறப்பு அஞ்சல் உறை (Cover) வெளியிட்டதே வாஜ்பேயி தலைமையில் இருந்த அரசு - மறந்து விட்டதா காவல்துறைக்கு?
4. மாநில அரசு தந்த மரியாதையோடு தந்தை பெரியார் உடல், அடக்கம் நடைபெற்றதற்கான பொருள் என்ன?
5. அவரது நூற்றாண்டை ஓராண்டு தமிழ்நாடு அரசு கொண்டாடியதே - அது நினைவில் இல்லையோ காவல்துறைக்கு?
6. அண்மையில் சென்னை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வால் இவர் ‘தமிழ்நாட்டின் மஹாத்மா’ என்றும் தமிழ்நாட்டின் தந்தை என்றும் நீதிபதி தீர்ப்பு எழுதியதை அறியவில்லையா காவல்துறை?
இன்னும் ஏராளம் உண்டு. இன்று தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகி, காவல்துறைக்கு மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் சட்டம், ஒழுங்கு, ஊரடங்கு உத்தரவு, மதக் கலவரம் இல்லாத பூமியானது யாரால்?
இத்தனை மாதங்களாக ஏன் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் சென்னைக் காவல்துறை எடுக்க வில்லை?
பூணூல் அறுப்பு குண்டர் சட்டம் போட்டு இப்படி அவமானத்தைச் சுமப்பதில் என்ன அவசரமோ அவசரம்?
பெரியாரைக் கொச்சைப்படுத்திய கோணல் புத்தியாளர்கள்மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க முன் வராவிட்டால், அடுத்த கட்டம் பற்றி யோசிப்போம்! சட்டப்படி சந்திக்க வேண்டிய நடவடிக்கைகளிலும் நீதிமன்றத்தில் - மக்களிடம் எடுத்துச் செல்லும்; வீதிமன்ற நடவடிக்கைகளிலும் திராவிடர் கழகம் ஈடுபடுவது உறுதி! உறுதி!!
பார்ப்பனர் பூணூலுக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவமா? மண் புழுக்களாய்க் கிடந்த மக்களை, மனிதர்களாக்கி, முதுகெலும்பு வழங்கிய பெரியார் இவர்கள் கண்ணோட்டத்தில் நாதியற்றவரா?
நாதியற்றவர்களுக்கும் சேர்த்து நாப்பறை கொட்டி காத்த நாயகர் அல்லவா அவர்? மறவாதீர்!
No comments:
Post a Comment