Monday, 5 October 2015

லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: தே.மு.தி.க விஜயகாந்த்




லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளை முறைப்படுத்தக்கோரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் லாரிகள் ஓடாததால் மொத்தம் சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன. அதோடு தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கும் லாரிகள் இயக்கபடாத காரணத்தினால் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதோடு இலட்சக்கணக்கான தினசரி மற்றும் பாரந்தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இது போதாதென்று இன்று நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால் டேங்கர் லாரிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளும் நாளையிலிருந்து இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நெடுஞ்சாலைதுறை ஒப்பந்த விதியின்படி ஒரு நெடுஞ்சாலைக்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டு விட்டால், அந்த சாலையில் முழுமையான சுங்க வரி வசூலிப்பது நிறுத்தப்பட்டு, பராமரிப்புக்காக மட்டும் 30 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பின்றி இருக்கையிலே சுங்க கட்டண வசூல் மட்டும் கனஜோராக நடப்பதென்ன நியாயம். அதோடு ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சாலை அமைப்பதற்காக செலவழிக்கப்பட்ட தொகையும் அன்றாடம் வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணத்தையும் மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது ஒப்பந்ததாரரின் கடமையாகும். ஆனால் இது நடைமுறை படுத்தப்படவில்லை. எனவே நாட்டிலுள்ள  சுங்கச்சாவடிகள் அனைத்திலும் இந்த விவரங்களை தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, இன்றைய நிலவரம் என்ன என்பதை இத்துறை சம்பந்தபட்ட மத்திய அமைச்சர் மக்களுக்கு தெரியபடுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 

தமிழகத்தை பொறுத்தவரை இந்த வேலை நிறுத்தத்தினால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா உடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி சுமூக தீர்வுகாண நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். குறைந்த பட்சம் வழக்கம் போலவே பிரதமருக்கும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்குமாவது கடிதம் எழுதியிருக்கவேண்டும். ஒருவேளை தமிழக மாநில நெடுஞ்சாலைகளின் தரத்தோடு ஒப்பிடும்போது தேசிய நெடுஞ்சாலைகள் நல்ல நிலையில் இருப்பதாக நினைத்துக்கொண்டு கடிதமெழுத மறந்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் தமிழகம் முழுக்க பெரும்பாலான நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக, சகதியும் சேறுமாக பயணம் செய்வதற்கே லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. இது தமிழக மக்கள் அன்றாடம் அனுபவித்துவரும் அநியாயம்தான் என்றாலும் சுங்கச்சாவடி விஷயத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கண்டும், காணாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகிறது.

சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் பொதுமக்களை இன்னும் நேரடியாக சென்றடையவில்லை என்றாலும், அடுத்த சில நாட்களில் கடுமையாக பாதிக்கக்கூடும். சுங்கச் சாவடிகள் பிரச்சினையை லாரி உரிமையாளர்களின் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் பொதுமக்களின் பிரச்சனையாகவும் கருதி லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை மட்டுமின்றி, மக்களின் உணர்வுகளையும் மதித்து லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment