Monday, 2 November 2015

மக்கள் நலக் கூட்டு இயக்கம் குறைந்தபட்ச செயல்திட்டம் வரைவு அறிக்கை - ஒருங்கிணைப்பாளர் வை.கோ வெளியிட்டார்



மக்கள் நலக் கூட்டு இயக்கம்
குறைந்தபட்ச செயல்திட்டம் வரைவு அறிக்கை
1. மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளை எதிர்ப்போம்
இந்திய நாட்டில் கால்நூற்றாண்டுக்கு மேலாக மத்திய அரசு கடைபிடித்து வரும் உலகமய, தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைகள் தமிழ்நாட்டிலும் மக்கள் வாழ்விலும், மாநில நலனிலும் நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்ட இக்கொள்கைகளை நரேந்திர மோடி அரசும் தீவிரமாக அமலாக்கி வருகிறது.
இந்திய இறையாண்மைக்கும், மக்கள் நலனுக்கும் விரோதமாக பாஜக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இக் கொள்கைகளை எதிர்த்து வலுமிக்க போராட்டங்களை மக்கள் நலக் கூட்டியக்கம் முன்னெடுத்துச் செல்லும்.
• பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்தவும்,
• நாட்டின் உற்பத்தித் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிகாணாமல், பங்குச்சந்தை சார்ந்த பொருளாதாரமாக மாற்றப்பட்டு வருவதை எதிர்த்தும்.
• வரைமுறையற்ற அந்நிய நிதி மூலதனம் குவிந்து வருவதை தடுக்கவும், கட்டமைப்புத் துறைகளில் அரசின் முதலீடுகளைப் பெருக்கவும், உள்நாட்டுத் தொழில்துறையை ஊக்குவிக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலையேற்றத்தைத் தடுக்கவும் உரிய பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள போராடுவோம். தொழில்துறையிலும், நிதித்துறையிலும், பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தவும், கருப்பு பணத்தை முற்றாக பறிமுதல் செய்திட வலியுறுத்துவோம்,
• வேளாண்மை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளுக்கு மானியங்களை வெட்டிக் குறைப்பதையும், மக்கள் நலத்திட்டங்களை சுருக்குவதையும் எதிர்த்துப் போராடுவோம்.
• மக்கள் நலன் காக்கும் மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்துவோம்.
2. இந்துத்துவ மதவெறி சக்திகளை முறியடித்தல்
மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக, அரசு நிர்வாகத்தை பயன்படுத்தி மதவெறி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா அமைப்புகள் இந்திய நாட்டின் பாரம்பரிய பன்முகத் தன்மைக்கு விரோதமாக மதவெறி கருத்துக்களை பரப்பி மதக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன. பசுவதைத் தடை என்ற பெயரில் மாட்டிறைச்சியை மையப்படுத்தி படுகொலைகளும், பதற்றமும் உருவாக்கப்படுகிறது. சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உருவாகியுள்ளது.
சமூகத்தில் பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி படுகொலைகள் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதிர்ச்சிகரமான தாக்குதல்களாக அமைந்துள்ளன. மதவெறி இந்துத்துவ சக்திகளை எதிர்த்து வலுவான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். மக்கள் ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வது, அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் சகோதரத்துவத்துடன் இணைந்து வாழும் மாநிலமாக தமிழகத்தை திகழச் செய்து மதச்சார்பின்மையினை நிலைநாட்டுவோம். மேலும் அறிவியல் பூர்வமான, முற்போக்கு பகுத்தறிவு கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதுடன் கருத்துச் சுதந்திரத்தையும், படைப்பாளிகளையும் பாதுகாப்போம். சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்துவோம்.
மதத்தின் பெயரால் உருவாக்கப்படும் எவ்வித மதத்தீவிரவாதமும் நாட்டை சீரழித்து விடும் என்பதால் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிவோம்.
3. சாதி வெறி சக்திகளை எதிர்த்தல்
தமிழகத்தில் அரசியல் ஆதாயத்திற்காக சாதி வெறி சக்திகள் சாதிய மோதல்களை திட்டமிட்டு நடத்தி வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. சாதி மறுப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பகிரங்கமாக அச்சுறுத்தப்படுகின்றன.
இத்தகைய சாதிவெறி சக்திகளை எதிர்த்தும் சகோதர உணர்வை வலுப்படுத்திடவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். மேலும் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை தடுத்திட தனிச் சட்டம் நிறைவேற்றவும், சாதி மறுப்புத் திருமணங்கள் புரிந்தோர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திடவும் மத்திய அரசை வற்புறுத்துவோம். மக்களவையில் நிறைவேற்றப்பட்டு தற்போது மாநிலங்களவையில் கிடப்பில் போடப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க வலியுறுத்துவோம்.
4. ஊழல் ஒழிப்பு
• உயர்மட்ட ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் இயற்றுவோம்.
• கிராம ஊராட்சி முதல் தலைமைச் செயலகம் வரை ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை உத்தரவாதம் செய்வோம்.
• அதிகாரத்தைப் பயன்படுத்தி சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதோடு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்களது சொத்து விபரத்தை ஒவ்வொரு ஆண்டும் பகிரங்கமாக வெளியிடுவது,
• ஊழல் வழக்குகளுக்கு உள்ளானவர்கள் அதிகாரத்திலிருந்து வெளியேறி விசாரணையை சந்திப்பது ஆகிய நடவடிக்கைகளை உறுதி செய்வோம்.
வெளிப்படையான அரசு நிர்வாகம்
• நேர்மையான நிர்வாகம், விரைவான, நிறைவான மக்கள் சேவையை உறுதிப்படுத்த சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவோம்.
• அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையும், அரசியல் தலையீட்டை அறவே தடுப்பதும் உறுதி செய்யப்படும். அரசை தேடி மக்கள் என்பதற்கு மாறாக, மக்களை நாடி அரசு என்ற வகையில் நிர்வாக அமைப்பில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்,
• சட்டமன்ற ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம். சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுவதோடு சட்டமன்ற விவாதக் குறிப்புகள் அனைத்தும் வலைதளத்தில் வெளியிடப்படும்.
• ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
• சமூக விரோத கும்பல் போலி ஆவணங்கள் மூலம் வீடு, மனை, நிலங்களை கைப்பற்றுவதை தடுக்க பத்திரப் பதிவுத் துறையில் நவீன மின்னணு தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும்.
உள்ளாட்சி நிர்வாகம்
• உள்ளாட்சி அமைப்புகள் சுயமாக செயல்படும் வகையில் கூடுதல் நிதி மற்றும் அதிகாரம் வழங்கப்படும்.
• உள்ளாட்சி நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்பட்டு திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து மக்களின் ஒப்புதல் பெறப்படும். நகர்ப்புறங்களில் வார்டு அடிப்படையான மக்கள் கூட்டங்கள் நடத்துவது கட்டாயமாக்கப்படும்.
• உள்ளாட்சி நிர்வாகங்களில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தனியான ஆணையம் அமைக்கப்படும்.
• கிராமப்புற - நகர்ப்புற சிறிய நடுத்தர கட்டுமான பணிகள் காண்டிராக்ட் மூலம் நிறைவேற்றுவது மட்டுமின்றி மக்கள் பங்களிப்போடும் வாய்ப்புள்ள இடங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கிட உள்ளாட்சி அமைப்புகள் மூலமே நிறைவேற்றப்படும்.
கனிம வளக் கொள்ளைகள்
• ஆற்று மணல், தாது மணல், கிரானைட் முதலான கனிமவள கொள்ளைகளை தடுத்து நிறுத்திடுவோம். இதுகாறும் நடந்துள்ள கனிம கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு துணைபோன அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• இதன் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து கனிம வள வியாபாரமும் அரசு நிர்வாகத்தின் மூலம் மக்களின் மேற்பார்வையோடு நேர்மையான முறையில் செயல்படுத்தப்படும்.
• விவசாயிகள் சொந்த உபயோகத்திற்கு ஏரி,குளங்களில் மண் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
5. சமூக நீதி
• தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறை பாதுகாக்கப்படும். மேலும் தனியார் துறையில் இடஒதுக்கீட்டினை விரிவுபடுத்துவதற்கான சட்டத் திருத்தம் வலியுறுத்தப்படும். மேலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு வழங்க ஆவண செய்யப்படும்.
• சமூக நீதிக்கு எதிராக அண்மைக் காலத்தில் இந்துத்துவா சக்திகள் ஒன்று சேர்ந்து வருகின்றன. இதனைத் தடுக்க முற்போக்கு ஜனநாயக சக்திகளும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களும் சிறுபான்மை மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
• அரசுத்துறைகளில் மாநில அரசு கடைபிடிக்கும் இடஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளையறிக்கை அவ்வப்போது வெளியிடப்படும்.
• நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.
6. தமிழ்மொழி வளர்ச்சி
• தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும்.
• தாய் மொழி தமிழ் பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண் 266 திருத்தம் செய்து தமிழ் பாடத்தை முதல் பாடமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் கணிணி உள்ளிட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் தாய்மொழி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளும் தாய் மொழிக் கல்வியில் ஏற்படுத்தப்படும்.
• தமிழை பயிற்று மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• உயர்நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழி வழக்காடு மொழியாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• தமிழகத்தில் தற்போது உள்ள அரசு நூலகங்கள் மேம்படுத்தப்படுவதுடன் புதிய நூலகங்கள் உருவாக்கப்படும். நூலகங்களுக்கு தேவையான பல்துறை நூல்கள் அவ்வப்போது முறையாக வாங்கப்படும்.
நாட்டுப்புற கலைகள்
•• நாட்டுப்புற கலைகளை பாதுகாத்திட, வளர்த்திட நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
•• நாட்டுப்புற கலை பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு கல்லூரிகளில் நாட்டுப்புற கலை பட்டப்படிப்பும் உருவாக்கப்படும்.
7. மாநில உரிமைகள்
• மத்திய- மாநில உறவுகள் சீரமைப்புக்கும், வலிமையான கூட்டாட்சி முறைக்கும், மாநில சுயாட்சி நிலை பெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• மாநிலங்களிலிருந்து மத்திய அரசு பெறுகின்ற வரி வருவாயில் 50 விழுக்காடு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்திட குரல் கொடுப்போம்.
• தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் நிர்வாக மொழியாக தீர்மானிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
• பொதுப்பட்டியல், மாநிலப் பட்டியல் இரண்டிலும் இல்லாத எஞ்சிய அதிகாரங்கள் (Residuary Power) அனைத்தையும் மாநிலங்களுக்கு வழங்கிட போராடுவோம்.
8. நதிநீர் பிரச்சனைகள்
• தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைத்திட வலியுறுத்தவும், காவிரியின் குறுக்கே மேகதாது, இராசி மணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• பவானி நதி மற்றும் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவும், பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியில் ஆந்திர அரசு தடுப்பு அணை கட்ட முயற்சிப்பதைத் தடுத்து நிறுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
• தென்னக நதிகளையும், மாநில ஆறுகளையும் இணைக்க உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்.
• நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீரை திறந்து விடுவது மற்றும் திருநெல்வேலி மாவட்டம், செண்பகவல்லி அணையை சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
• நதிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் நமது உரிமைகளை அனைத்துக் கட்சியினர் ஒருங்கிணைப்போடு போராடி பெற்றிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில், அண்டை மாநிலங்களோடு பரஸ்பர நல்லுறவு கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்டை மாநிலங்களில் கடலில் வீணாக கலக்கும் நீரை தமிழகத்திற்கு பெறுவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
9. இலங்கை தமிழர்கள் பிரச்சனை
• இலங்கையில் வடக்கு - கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அந்த மண்ணில் பூர்வ குடி மக்களாவர். கடந்த 60 ஆண்டு காலமாக கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழர்களுக்கு இலங்கை அரசால் சம உரிமை மறுக்கப்பட்டு இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்ட நிலையில் தங்கள் உரிமைகளுக்காக அங்கு தமிழ் மக்கள் போராடி வந்தனர். இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஐ.நா. மன்றம் வகுத்துள்ள மனித உரிமை பிரகடனத்தை துச்சமாக மதித்து அப்பாவி தமிழர்களை இலங்கை அரசின் ராணுவப் படைகள் படுகொலை செய்தன.
• தமிழ் மக்களின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தவும், நீதியை நிலைநாட்டவும், குற்றவாளிகள் தப்பி விடாமல் உரிய தண்டனை பெறவும் பன்னாட்டு நீதிபதிகளையும் கொண்ட நம்பகத் தன்மை வாய்ந்த நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு - கிழக்கு மாநிலங்களில் உள்ள கட்டாய சிங்கள குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
• தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுக்கு நிகரான சம உரிமைகள் வழங்க வேண்டும். தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து, இலங்கை தமிழ் மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலம் மீள் ஒப்படைப்பு செய்திட வேண்டும்.
• அகதி முகாம்களில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தப்படும்.
10. சட்டம் - ஒழுங்கு
• தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், சிறுமிகள் மீது பாலியல் கொடுமைகள், வழிப்பறி, செயின் பறிப்பு போன்றவைகள் நடைபெறாமல் தடுத்திடவும், சீரான சட்டம் - ஒழுங்கை பேணி பாதுகாத்திடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமூக விரோத சக்திகளை முறியடிப்பது, கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கடத்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளை முற்றாக ஒழித்து பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வது உறுதி செய்யப்படும்.
• காவல்துறை மக்களுக்கு சேவைத்துறை என்ற நிலை உருவாக்கப்படும்.
• காவல்நிலையங்களில் அத்துமீறல்கள், சித்திரவதைகள், லாக்கப் மரணங்கள், அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. காவல்துறை அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால் விஷ்ணுப் பிரியா என்ற டி.எஸ்.பி. தற்கொலை செய்யும் மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகைய அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படும். தவறிழைக்கும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களது ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதோடு அமைதியான போராட்டங்கள் நடத்துவோர் மீது கொடூரமான தாக்குதல் அரசின் தூண்டுதலால் நடத்தப்படுகிறது. பல நகரங்களில் போஸ்டர், தட்டிகள் வைப்பதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகள் பேணிப்பாதுகாத்திடவும், ஜனநாயக ரீதியான மக்கள் இயக்கங்கள், வெகுமக்கள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கிடவும் ஆவண செய்யப்படும்.
• பெண்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்ககை எடுக்க தவறும்பட்சத்தில் அத்தகைய காவலர்கள் மீது ஐ.பி.சி. 166 ஏ-வது பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• காவலர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை மற்றும் 8 மணி நேர வேலை உறுதி செய்யப்படும்.
ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு
• முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை பாதுகாக்கப்படும்.
• ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உள்ள பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதையும் பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரம் உத்தரவாதம் செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மக்கள் உரிமை போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளும் திரும்ப பெறப்படும்.
11. மதுவிலக்கு
• தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த தேவையான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• “சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம்” உருவாக்கப்பட்டு மது ஒழிப்பிற்கு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். போதை ஒழிப்பிற்கான சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்படும்.
• டாஸ்மாக் பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ற முறையில் அரசுத் துறையில் மாற்று பணி வழங்கப்படும்.
• தமிழ்நாட்டில் மது உற்பத்தி ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு மது ஆலைகளை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
12. வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு
• வேளாண் நெருக்கடி தீவிரமடைந்து மாநிலத்தில் பெரும்பகுதி மக்களான கிராமப்புற மக்கள் வேலை, வருமானத்தை தேடி நகர்ப்புறங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. கடன் வலையில் சிக்கி இருக்கிற விவசாயிகள் நிலம் உட்பட தங்கள் உடமைகளை அடிமாட்டு விலைக்கு விற்பதால், நிலமற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விவசாயத்தை மேம்படுத்தவும், அதை லாபகரமான தொழிலாக மாற்றவும், கிராமப்புறங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
• நெல், கரும்பு, மணிலா, பருத்தி, மரவள்ளி, ராகி, கம்பு, சோளம், மக்காச்சோளம், மஞ்சள், கொப்பரைத் தேங்காய், இரப்பர் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களுக்கும் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் அடக்க விலையோடு 50 விழுக்காடு சேர்த்து விலை தீர்மானிக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மற்றும் தானியங்கள் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் முழு அளவு கொள்முதல் செய்யப்படும்.
• கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ. 1000 கோடி வட்டியுடன் வழங்கிட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• இயற்கை முறை விவசாயத்திற்கு முழு மானியம் வழங்கப்படும். மரபணு மாற்று பயிர்களுக்கும், அதன் சோதனைக்கும் தடை விதிக்கப்படும்.
• விவசாயிகளுக்கு 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதுடன், மின்னிணைப்பு கோரியுள்ள அனைவருக்கும் மின்னிணைப்பு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• பயிர்க்கடன் கோருகின்ற அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும். ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகளின் பயிர்க் கடன் பாக்கிகள் ரத்து செய்யப்படும்.
• விவசாயிகள் பெற்றுள்ள நகைக் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு அசலை செலுத்துபவர்களுக்கு நகைகள் திருப்பி அளிக்கப்படும்.
• ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு உரம், பூச்சிமருந்து, விதை உள்ளிட்ட இடுபொருட்கள் 50 விழுக்காடு மானிய விலையில் வழங்கப்படும்.
• பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் மாட்டுத் தீவணம் வழங்குவதோடு பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். ஆவின் நிறுவனம் தரம் உயர்த்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும் முழு அளவு பாலும் கொள்முதல் செய்யப்படும்.
• பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ. 25/- என்று நிர்ணயிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• பழங்கள் - காய்கறிகள் அழுகாமல் பாதுகாத்திட குளிர்பதன நிலையங்கள் அந்தந்த பகுதியில் அமைக்கப்படும்.
• விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், அனைத்து சாகுபடிக்கும் இதனை விரிவுபடுத்தப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நிலம்
• சாகுபடி பரப்பளவு குறையாமல் பாதுகாத்திட விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும், விவசாயம் அல்லாத பணிகளுக்கு மாற்றப்படுவதையும் தடுத்திட தேவையான சட்டம் இயற்றப்படும்.
• 1894 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை விட கொடுமையான பிரிவுகளைக் கொண்டு விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து அபகரிக்க வழிவகை செய்யும் தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள “தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் - 1997” ரத்து செய்யப்படும்.
• நிலம் கையகப்படுத்துதலில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் குறையாத வகையில் புதிய அணுகுமுறை மேற்கொள்ளப்படும்.
• தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை அமலாக்கி உபரி நிலத்தையும், அரசு தரிசு நிலத்தையும் நிலமற்ற ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் வீதம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். இந்நிலங்களில் நீண்ட காலமாக குத்தகை செய்து வரும் நிலமற்ற ஏழை குத்தகை சாகுபடியாளர்களுக்கும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் அந்நிலங்களை சொந்தமாக்குவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும். இதனால் கோவில் சம்பந்தப்பட்ட பூஜை மற்றும் பராமரிப்பு பணிகள் பாதிக்காத வண்ணம் உறுதி செய்யப்படும். குத்தகை சாகுபடியாளர்களின் பழைய பாக்கிகள் ரத்து செய்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• இதுவரை அமலாக்கப்படாத மத்திய வன உரிமைச் சட்டம் 2006 தமிழ்நாட்டில் அமலாக்கப்பட்டு ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிலம் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• தமிழகத்தில் எஸ்டேட்ட நிலங்களில் நீண்ட காலமாக குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
• குமரி, நீலகிரி மாவட்டங்களில் அமலாக்கப்பட்டு வரும் “தனியார் வனப்பாதுகாப்புச் சட்டம்” திருத்தப்பட்டு விவசாயிகளுக்கு நில உரிமை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பாசனம்
• மேட்டூர் நீர்த்தேக்கம் உட்பட, நீர்ப்பாசன ஆதாரங்கள், ஏரிகள், குளங்கள், பாசன வடிகால் வாய்க்கால்கள் மக்கள் ஒத்துழைப்போடு தூர்வாரி பராமரிக்கப்படும். அனைத்து பாசனக் கால்வாய்களும் நவீனப்படுத்தப்படும். இதற்கென தனிவாரியம் உருவாக்கி உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் அரசு துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம் பெற ஆவன செய்யப்படும்.
• காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன், ஷேல் எரிவாயு, பெட்ரோலியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இடமளிக்காமல் இப்பகுதி விவசாயத்திற்கு மட்டுமேயான பகுதியாக இருக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். காவிரி பாசனத்தை நவீனமயப்படுத்திட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
• நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
• சொட்டுநீர் பாசனத்தை மேலும் தீவிரமாக்கி அதற்கான மானியமும் உயர்த்தி வழங்கப்படும்.
• அத்திக்கடவு - அவினாசி திட்டம், காவிரி - குண்டாறு - வைகை திட்டம், தாமிரபரணி - கருமேணியாறு இணைப்பு போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
• நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதை தடுத்திட அரசு செலவில் மழைநீர் சேகரிப்பது, அனைத்து கிராமங்களிலும், பேரூராட்சிகளிலும் உள்ள
அரசு நிலங்களில் பண்ணை குட்டைகள் வெட்டுவது மற்றும் பண்ணை குட்டை வெட்டப்படும் பட்டா நிலத்திற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். ஆழ்குழாய்கள் இறக்கி நிலத்தடி செறிñட்டும் திட்டம் மேற்கொள்ளப்படும்.
• கடலில் நீர்வீணாக கலப்பதை தடுத்திட காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் 50 கி.மீ. தூரத்துக்கு ஒரு கதவணை கட்டி நீரைத் தேக்குவது, கடல் நீர் உட்புகாமல் தடுத்திட முகத்துவாரங்களில் தடுப்பணைகள் கட்டுவது போன்ற பணிகள் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படும்.
குடியிருப்பு மற்றும் மனைப்பட்டா
• கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வீட்டுமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். ஏற்கனவே பல வகை புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கப்படும்.
• சொந்த வீடு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் குடியிருக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உட்பட அனைத்துப் பகுதிகளிலும் வீடு கட்டுவதற்கான பெருந்திட்டம் உருவாக்கப்பட்டு வீடில்லாத அனைத்து குடும்பங்களுக்கும் வீடு வழங்கப்பட்டு குடிசைகள் இல்லா தமிழகம் உருவாக்கிடவும் திட்டமிடப்படும்.
• ஆண்டுக்கு ஒரு லட்சம் பசுமை வீடுகள் கட்டும் இலக்குடன், இத்திட்டத்திற்கு அரசு நிதியுதவி வீடொன்றுக்கு ரூ. 4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
• சென்னை உள்ளிட்ட மாநகரங்கள், நகரங்களிலும் வாழும் குடிசைப் பகுதி மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும்.
13. தொழில்வளம்
• சிறு - குறு தொழிலுக்கு முன்னுரிமை அளித்தல், கடந்த காலத்தைப் போலவே சில குறிப்பிட்ட தொழில்களின் உற்பத்தியை சிறு தொழில்களுக்காக ஒதுக்குதல், தடையற்ற மின்சாரம், இத்தொழில்களுக்கு நிரந்தரமாக உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளை பெற்றுத் தருவது போன்ற அம்சங்களை நிறைவேற்ற திட்டமிடப்படும்.
• சிறு மற்றும் குறுந்தொழில் உற்பத்தியிலிருந்து அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்கள் 15 சதவிகிதம் கொள்முதல் முன்னுரிமையை முறையாக அமல்படுத்தப்படும்.
• அனைத்து மாவட்டங்களிலும் - குறிப்பாக கிராமப்பகுதிகளில் - புதிய தொழில்பேட்டைகள் துவக்கப்படும். ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் மானிய விலையில் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு இடம் வழங்கப்படும்.
• தமிழக அரசு அறிவித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008-ன் படி அறிவிக்கப்பட்ட அனைத்து சலுகைகளும் அந்த தேதி முதல் அமலாக்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அமைக்கப்படும் தொழிற்சாலையின் 10 விழுக்காடு பங்குகள் நில உரிமையாளர்களுக்கு வழங்கவும், நிலம் வழங்கும் குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு வேலையும், நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்களுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் அளித்திடவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையுடன் ஏற்படுத்தப்படும்.
• தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• குறுந்தொழில் பேட்டைகள், மூலப்பொருள் வங்கி அமைத்தல், சொத்துப் பிணையம் இன்றி கடன் உதவி வழங்குதல் மற்றும் வங்கிக் கடனைத் திருப்பி செலுத்தும் கால அவகாசத்தை நீட்டுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• பெருந்தொழில் முதலீட்டாளர்களிடம் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இங்குள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை கட்டாயமாக்கி செயல்படுத்தப்படும்.
• விவசாயத்திற்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ள நெசவுத் தொழில் நெருக்கடிகளுக்கு தீர்வு காணுதல். சிறு மற்றும் குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு தற்போது அரசு வழங்குகின்ற 500 யூனிட் கட்டணமில்லா மின்சாரத்தை 1000 யூனிட் வரை உயர்த்துதல், மேலும் இச்சலுகை 10 எச்.பி. உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற நிலையை மாற்றி 15 எச்.பி. வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
• விசைத்தறிகள் தரம் உயர்த்துவதற்கு உரிய மானியம் அளித்தல். சிறு மற்றும் குறு விசைத்தறி உரிமையாளர்கள் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்திக்கு தேவையான கருவிகள் உரிய மானிய உதவியுடன் அளித்தல். விசைத்தறிகளுக்குப் பயன்படும் நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 விழுக்காடு விற்பனை வரியை 2 விழுக்காடாக குறைத்தல் போன்ற அம்சங்கள் நிறைவேற உரிய முறையில் திட்டமிடப்படும்.
• திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள் கட்டமைப்பு வசதிகளுடன் நவீன ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
• பின்தங்கிய பகுதிகளாக உள்ள தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவர். அரசின் சலுகைகளை அளிப்பதில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
• மோட்டார் பம்ப் செட் உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகளுக்கு வாட் வரியை 2 விழுக்காடு என்ற அளவில் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
• தமிழ்நாட்டில் சுற்றுலாத் திட்டங்கள் மேம்படுத்தப்படும்.
• வரலாற்று சிறப்புமிக்க தலங்களை சுற்றுலா வட்டத்தில் இணைக்கப்படும்.
• சுற்றுலா வாகனங்கள் இயக்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, உள்ளூர் சுற்றுலா வாகனங்கள் இயக்குபவர்களுக்கு முன்னுரிமை அளித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மின்சாரம்
• மின்உற்பத்திக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு தமிழகத்தை மின் உபரி மாநிலமாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
• மாதத்திற்கு 250 யூனிட் வரை உள்ள பயனாளிகளுக்கு 50 விழுக்காடு மின் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும்.
• மரபுசாரா எரி சக்தி திடடங்களான காற்றாலை மின்உற்பத்தி, சூரிய ஒளி உற்பத்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கிராம பஞ்சாயத்துகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை வலுப்படுத்தி கிராமங்களில் மின் வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்து பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த தனிநபர் வீடுகளில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கிட மானியத்துடன் வட்டி இல்லா கடன் வழங்கிட ஏற்பாடு செய்யப்படும்.
• தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகத்தின் சார்பில் மின்சாரம் வெளிமாநிலங்களிலிருந்து வாங்குவதில் நடைபெறும் ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையுடன் முறைகேடுகள், ஊழல்கள் இல்லாமல் செயல்படுத்தப்படும்.
• தொழில்நுட்ப ரீதியில் மின்சாரம் கொண்டு செல்லும் பாதைகளில் ஏற்படும் மின்இழப்பை (Transmission Loss) குறைப்பதற்கும், அடிக்கடி மின்அழுத்தம் குறைவதை தடுத்து தடையின்றி தரமான மின்சாரம் வழங்கிடவும், நகரங்களிலும், கடற்கரையோர கிராமங்களிலும் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
• மின்சார வாரியத்தில் ஊழலை ஒழித்து, நிர்வாக சீரமைப்பின் மூலம் மின்சார வாரியம் நட்டமின்றி இயங்கிட வழிவகை செய்யப்படும்.
14. தொழிலாளர் உரிமைகள்
¨ அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தப்பட்ச மாத ஊதியமாக ரூ. 15,000/- வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
¨ தொழில் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் உதவும் முதலீடுகள் கொண்டுவரப்படும். அதேசமயம், தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளும், தொழிற்சங்க உரிமைகளும் முழுமையாக பாதுகாக்கப்படும்.
¨ •தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான சட்டத் திருத்தம் இயற்றப்படும்.
¨ •பன்னாட்டு தொழில்நிறுவனங்களிலும் மற்றும் உள்நாட்டு பெரிய நிறுவனங்களிலும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை உத்தரவாதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
¨ சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகளில், நாட்டுக்குள் இன்னொரு நாடு போல் இந்நாட்டு தொழிலாளர் நலச் சட்டங்கள் அமல்படுத்தாத நிலை உள்ளது. பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் இந்நாட்டு சட்டங்களை அமலாக்குவது உத்தரவாதப்படுத்தப்படும்.
¨ முறைசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர் நல வாரியங்களும் தீர்மானிக்கப்பட்ட நலவாரியக் குழுக்கள் மூலமே செயல்படுத்தவும், வாரிய உறுப்பினர்கள் பயன்பெறுவதற்கு தடையாக உள்ள நிபந்தனைகளை ரத்து செய்யவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
¨ தொழிலாளர் விரோத மத்திய பாஜக அரசு இயற்ற துடிக்கும் ‘சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை’ திரும்ப பெற உரிய முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
¨ விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் ஒரு குழு அமைத்து உரிய முறையில் தீர்வு காணப்படும்.
• தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களைத் திருத்த முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
• அரசு துறைகளிலும், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிலும் நிரந்தர பணிகளில் தொழிலாளர்களை ஒப்பந்தக்கூலிகளாக்கி உழைப்பு சுரண்டப்படுவதை தடுக்கவும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• பஞ்சாலைகளில் நவீன கொத்தடிமை முறையாக உள்ள சுமங்கிலித் திட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
• பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சட்டப்படியான 8 மணி நேரம் வேலை என்பதை கட்டாயமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• வேலை தேடி நகர்ப்புறங்களை நோக்கிச் செல்லும் கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள் உருவாக்கப்படும்.
• பட்டாசு தயாரிக்கும் தொழில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் நிறைவேற்றப்படும்.
15. கல்வி
• சமூக நீதி, மனித நேயம், மத நல்லிணக்கம், தேசப்பற்று, பாலியல் சமத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களை மாணவர்களிடம் உருவாக்கும் வகையில் பாடத் திட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
• சமூகத்தின் உயிர் நாடியான கல்வி தனியார்மயமாக்கப்படுவதை தடுக்கவும், தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போட்டு அரசு கல்வி நிறுவனங்கள் முன்னேறுவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
• ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழி வழி கல்விக்கு ஊக்கமளிக்கப்படும்.
• பல கல்வி வாரியங்கள் என்ற நிலை மாறி, ஒரே சீரான கல்வியமைப்பு உருவாகிட வலியுறுத்துவோம்.
• பாஜக அரசு ‘அந்நியக்கல்வி நிறுவனங்கள் ஒழுங்காற்று மசோதா’வை திரும்ப பெற தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
• உயர்கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் தரமான உயர்கல்வியை வழங்குவதில் மாநில அரசின் தலையீட்டையும், பங்கையும் தனியார் நிறுவனங்கள் நிராகரித்து வருகின்றன. எனவே, அதை பொதுப்பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
• கல்வி பெறும் உரிமைச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி, தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஒதுக்கீட்டை ஒற்றைச்சாளர முறையில் அரசே நிரப்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• உயர் கல்வித்துறையை முழுமையாக வர்த்தகமயமாக்கிட, உலக வர்த்தக அமைப்பு இந்தியாவுடன் செய்து கொண்ட பொது உடன்படிக்கை அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம்.
• மாவட்டந்தோறும் மாநில அரசு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.
• தமிழகத்தில் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு மொத்த உற்பத்தி மதிப்பில் 5 சதவிகிதம் அதிகரிக்கப்படும்.
• அரசுப் பள்ளிகளில் மழலையர் பள்ளிகள் உருவாக்கப்படும்.
• சமச்சீர் கல்வி என்பது பாடத்திட்டம் மட்டும் என்று குறுக்கப்படாமல், கட்டமைப்பு வசதிகள், மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம், ஆசிரியர் நியமனம் போன்றவை உள்ளிட்டு பொதுப்பள்ளி கல்வித்திட்டம் எனும் பொருளில் அமலாக்கப்படும்.
• கிராமப்புற ஏழை, எளிய மக்கள் கல்வி பெறும் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும். மூடப்பட்டு உள்ள அரசுப்பள்ளிகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
• அனைத்துப்பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்கள், உள் விளையாட்ட அரங்குகள் அமைக்கப்படும்.
• அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் காலியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.
• மாறிவரும் தேவைகளை கணக்கில் கொண்டு பாடத் திட்டங்களை மேம்படுத்தப்படும். ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டத்திற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்பாடத் திட்டமாக அறிவிக்கப்படும். இதற்கு தேவையான கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
• தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இலவச விடுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவிற்கு இல்லை. இலவச விடுதிகளை மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்வதோடு, இலவச விடுதிகளில் உணவுக்கான மானியமும், தரமான உணவும் மற்றும் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும்.
• மொழிவழிச் சிறுபான்மை மக்களுக்காக உள்ள கல்வி நிலையங்களை முறையாக நடத்துவதோடு தேவைக்கேற்ப கூடுதல் கல்வி நிலையங்கள் துவக்கப்படும். மேலும் இக்கல்வி நிலையங்களில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கிட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
• கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள், ஊழியர்கள் காலிப்பணி இடங்களை தேர்வு வாரியங்கள், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் நிரப்பப்படும். கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
• தனியார் உயர்கல்வி நிறுவனங்களை சமூக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தரம், கட்டணம், நெறிமுறைகள் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
• பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்.
• ஐஏஎஸ்/ ஐபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவர் அதிக தேர்வாகும் வகையில் தரமான கல்வி வழங்கிட பாடத்திட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்படும்.
• அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடத்தப்படும்.
• ஆய்வு படிப்புகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
• கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச்சாளர முறையைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
• மழலைப் பள்ளியில் துவங்கி பிளஸ் 2 வரை தொடரும் தனியார் பள்ளிகளின் கட்டணம் மற்றும் நன்கொடைக்கொள்ளைக்கு முடிவு கட்டப்படும்.
• கலை, அறிவியல் சுயநிதி கல்லூரிகளுக்கும் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்படும்.
• தனியார் பள்ளிகளுக்கும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.
• சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கிட தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உரிய காலங்களில் உயர்த்தி வழங்கப்படும். கல்விக் கடன் கோருகிற அனைத்து மாணவர்களுக்கும் நிபந்தனையின்றி கடன் வழங்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
• மலைவாழ் மக்களுக்காக உண்டு உறைவிடப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மலைக்கிராமங்களில் கூடுதலான பள்ளிகள் துவக்கப்படும்.
16. சுகாதாரம்
• மாவட்டத்திற்கு ஒரு பன்னோக்கு மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக்கல்லூரி துவக்கப்படும்.
• ஆரம்ப சுகாதர நிலையம் முதல் மாவட்ட அரசு பொது மருத்துவமனை வரை மருத்துவக்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுவதுடன் வட்ட அரசு மருத்துவமனைகளிலும், முழு உடல் பரிசோதனைக்கான பன்னோக்கு நோய் காண் மையங்கள் அமைக்கப்படும். போதுமான மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பொதுசுகாதாரத் துறையின் தரம் உயர்த்தப்படும்.
• தமிழகத்தில் சுகாதாரத்துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும்.
• சமீப காலங்களில் கிராமப்புற நல்வாழ்வு சேவையில் நோய் தடுப்பு செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க கிராமப்புற சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போதுமான அளவு நியமிக்கப்படுவர்.
•. நோய் சிகிச்சை செலவு குடும்பம் ஒன்றுக்கு ரூ. 6 லட்சமாக உயர்த்தி வழங்குவதோடு அனைத்து நோய்களுக்கான சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் அனுமதிக்கும் வகையில் மருத்துவக் காப்பீடு திட்டம் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• மருத்துவப்பணியாளர்கள், மருத்துவர்கள் கிராமப்புற பணியில் ஈடுபடுவதை கட்டாயமாக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment