ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கத்தை தொடங்கியுள்ளது.
இந்த இயக்கம் சார்பில் மது விலக்கு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்த 4 கட்சிகளும் தேர்தல் நேரத்தில் கூட்டாக செயல்படுவோம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதற்கான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார்.
இது தொடர்பாக வைகோ, விடுதலை சிறுத்தை இயக்க தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் எழும்பூர் தாயகத்தில் நடைபெற்றது.
அப்போது மக்கள் நல கூட்டு இயக்கம் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக செயல்படும் என்று வைகோ அறிவித்தார். இந்த கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டங்கள் அடங்கிய 37 பக்க அறிக்கை ஒன்றும் புத்தகமாக வெளியிடப்பட்டது.
பின்னர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நல கூட்டணி இருக்கும். அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. அதே நேரத்தில் ஒத்த கருத்துக்களை மற்ற கட்சிகள் மக்கள் நல கூட்டணியில் சேரலாம்.
மக்கள் நல கூட்டு இயக்கம் மக்கள் நல கூட்டணியாக மாறினாலும் கூட்டு இயக்கம் தனியாக தொடர்ந்து செயல்படும். அதில் தற்போதுள்ள 4 கட்சிகள் மட்டுமே இடம் பெற்று இருக்கும். அது நிரந்தரமான அமைப்பாக இருக்கும்.
தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து மக்கள் நல கூட்டு இயக்கம் செயல்படும்.
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி சார்பில் வாக்காளர்களை சந்திக்க உள்ளோம். நிச்சயம் தேர்தலில் நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையில், ‘‘தமிழகத்தில் ஊழல் ஒழிப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், பூரண மது விலக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment