Friday, 6 November 2015

ம.தி.மு.க பொதுசெயலாளர் வை.கோ வின் தாயார் மறைவுக்கு தொல் திருமாவளவன் இரங்கல்


விடுதலைசிறுத்தைகள் இயக்க தலைவர்.அண்ணன் திரு.திருமாவளவன் அவர்களின் இரங்கல் செய்தி :
1980களில் விடுதலைப்புலிகளின் பாதுகாவல் அரணாக வைகோ அவர்களின் கலிங்கப்பட்டி இல்லம் இருந்தது என்பதை யாவரும் அறிவோம். அக்காலச் சூழலில் ஏராளமான விடுதலைப்புலிகளை தம் இல்லத்தில் தங்க வைத்து உணவு பரிமாறியும், மருத்துவ உதவிகள் செய்தும் பெற்ற பிள்ளைகளைப் பராமரிப்பதுபோல தாயுள்ளத்தோடு விடுதலைப் புலிகளைப் பராமரித்துவந்தார் என்பதையும் உலகம் அறியும். தன்னுடைய மகன் உள்வாங்கிய அரசியலுக்கும் நடத்திய போராட்டங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதுடன் பல்வேறு அரசியல் நெருக்கடிகளையும் சந்தித்தவர். நெருக்கடிகளுக்கு அஞ்சி, தானோ தன்னுடைய பிள்ளைகளோ பின்வாங்க வேண்டும் என்று ஒருபோதும் முனையாதவர். அண்ணன் வைகோ மற்றும் அவரது இளவல் ரவி ஆகிய இருவரும் ஈழத் தமிழருக்கான விடுதலைக் களத்தில் அதிதீவிரமாக ஈடுபட்ட காலத்தில் அவ்விருவரையும் ஈழவிடுதலைக்காக முழுமையாக ஒப்படைத்து ஊக்கமளித்தவர்.
அத்தகைய அர்ப்பணிப்பும் போர்க்குணமும் கொண்ட அன்னை மாரியம்மாள் அவர்கள் காலமாகிவிட்டார் என்பது ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தமது வாழ்வின் இறுதிநாட்களில் தமிழக மக்களைக் காப்பாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தக்கோரி மதுஒழிப்புக் களத்தில் போராடிய ஒரு போராளியாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். முதுமையிலும் நீர்த்துப்போகாத போர்க் குணத்தோடு கனல்வீசும் நெருப்பாய்க் களமாடிய அன்னை மாரியம்மாள் அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அவரை இழந்து வாடுகிற அண்ணன் வைகோ உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment