அமெரிக்காவில் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்களால் பேசும் இந்திய மொழியாக இந்தி திகழ்கிறது. சுமார் 6.5 லட்சம் பேர் இந்தி பேசுகின்றனர். அங்கு தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 1.9 லட்சமாக உள்ளது.
அமெரிக்காவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த சமூக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில், சுமார் 60 மில்லியன் மக்கள், தங்கள் வீடுகளில் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகள் பேசுகின்றனர். வீட்டிலும் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை சுமார் 25 மில்லியன்களாக இருக்கிறது.
வீடுகளில் ஆங்கிலத்தைத் தவிர்த்துப் பேசும் மற்ற மொழிகளில் ஸ்பானிய மொழி 37.4 மில்லியன் மக்களோடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
அடுத்தடுத்த இடங்களில் சீன மொழி (சுமார் 2.9 மில்லியன்), பிரெஞ்சு (1.3 மில்லியன்), கொரியன் (1.1 மில்லியன்), ஜெர்மன் (1.1 மில்லியன்), வியட்நாம் (1.4 மில்லியன்), அராபிய மொழி (924,573), டாகாலோக் (1.6 மில்லியன்) மற்றும் ரஷிய மொழி (879,434) ஆகியவை இருக்கின்றன.
இந்திய மொழிகளில், இந்தியாவின் தேசிய மொழியான இந்தி, 6.5 லட்சம் பேரோடு அதிகம் பேசுபவர்களில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக, சுமார் 4 லட்சம் மக்கள் உருது பேசுகின்றனர். 3.7 லட்சம் பேர் குஜராத்தியும், 73,000 பேர் மராத்தியும் பேசுகின்றனர். பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழிகளை 2.5 லட்சம் மக்கள் பேசுகின்றனர்.
அஸ்ஸாமி 1300 பேராலும், காஷ்மீரி 1700 பேராலும் பேசப்படுகிறது. ஒரியா மொழியை 5,000-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்றனர். பிஹாரியை 600 பேரும், ராஜஸ்தானியை 700 பேரும் பேசுகின்றனர். நேபாளியை 94,000-க்கும் மேற்பட்டோர் பேச, சிந்தியை சுமார் 9,000 பேர் பேசுகின்றனர்.
தமிழ் மொழி
அமெரிக்காவில் வசிக்கும் 2.5 லட்சம் லட்சம் பேர், வீட்டில் தெலுங்கு பேசுகின்றனர். தமிழ் மொழி சுமார் 1,90,000 பேரால் பேசப்படுகிறது. மலையாளத்தை சுமார் 1,46,000 பேர் பேச, கன்னட மொழி சுமார் 48,000 பேரால் பேசப்படுகிறது.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கீடு மையம், அங்கு பேசப்படும் மொழிகள் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
ஆதிவாசி மொழியான முண்டா 2,000 பேராலும், திபெத்தியன் 16,000 பேராலும் பேசப்படுகிறது. பென்சில்வேனியா டச்சு, உக்ரேனிய, துருக்கிய, ரோமானிய, அம்ஹரிக் மற்றும் சில மொழிகள் குறைவான அளவிலான மக்களாலேயே பேசப்படுகின்றன.
சுமார் 3,50,000 பேர் தங்கள் வீட்டில், வட அமெரிக்கப் பூர்வகுடிகளின் மொழிகளான யுப்பிக், டகோட்டா, அப்பாச்சி, கெரிஸ் மற்றும் செரோக்கீ உள்ளிட்ட மொழிகளைப் பேசிவருகின்றனர்.
இது குறித்துப் பேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளியியலாளர் எரிக் விக்ஸ்ட்ரோம், "அமெரிக்காவில் ஆங்கிலம், ஸ்பானிய அல்லது வியட்நாமிய மொழிகளே அதிகம் பேரால் பேசப்படுகிறது என்று எண்ணியிருந்தோம். ஆனால் இந்த ஆய்வின் மூலம், மொழி வேறுபாடு அமெரிக்கா முழுவதும் வியாபித்திருக்கிறது என்பது தெளிவாகி உள்ளது.
எத்தனை மொழிகள் இங்கே இருக்கின்றன மற்றும் எவ்வளவு பேர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர் போன்ற தகவல்கள், கொள்கைகளை உருவாக்குபவர்களுக்கும், திட்டவியலாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்" என்று கூறினார்.
No comments:
Post a Comment