வர உள்ள தீபஒளி திருநாளையடுத்து: சிறப்பு பேரூந்து என்ற பெயரில் சீரழிக்கப்படும் போக்குவரத்து கழகங்கள்! என பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு குற்றம் சாட்டியுள்ளார்.
தீபஒளி திருநாளையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாழ்பவர்கள் தங்களின் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக மொத்தம் 11,959 சிறப்பு பேரூந்துகளும், சொந்த ஊர் சென்றவர்கள் தீபஒளி திருநாள் முடிந்து திரும்புவதற்கு வசதியாக அதே எண்ணிக்கையிலான சிறப்பு பேரூந்துகளும் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்நடவடிக்கையால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என்பதை கடந்த ஆண்டு அனுபவங்கள் உணர்த்துகின்றன.
தீபஒளி திருநாளுக்காக சிறப்புப் பேரூந்துகளை இயக்குவது என்பது தவிர்க்க முடியாதது ஆகும். அதிலும் குறிப்பாக பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பவர்கள் தீபஒளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக சிறப்புப் பேரூந்துகள் இயக்கப்பட வேண்டியது அவசியத்திலும் அவசியம் ஆகும். ஆனால், பயணிகளின் தேவையை பொருட்படுத்தாமல், அதிக பேரூந்துகளை இயக்கியதாகக் கணக்கு காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்களால் அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு மட்டுமே ஏற்படுகிறது.
உதாரணமாக சென்னையிலிருந்து நேற்று மட்டும் 1106 சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டன. இதற்காக இப்பேரூந்துகள் அனைத்தும் தெற்கே கும்பகோணம், தஞ்சாவூர் முதல் கன்னியாகுமரி வரையிலிருந்தும், மேற்கே சேலம் முதல் கோவை வரையிலிருந்தும் வரவழைக்கப் பட்டன. சென்னையிலிருந்து வெளியூர் செல்வோரின் தேவைக்காக மட்டுமே இவை இயக்கப்படுவதால், வெளியூரிலிருந்து சென்னை வரும் பேருந்துகள் அனைத்தும் 90% காலியாகவே இயக்கப்படுகின்றன.
இதனால், பயண தொலைவுக்கேற்ப ஒரு பேரூந்துக்கு ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை இழப்பு ஏற்படுகிறது. சராசரியாக ஒரு பேரூந்துக்கு ரூ.12,000 இழப்பு என்று வைத்துக் கொண்டாலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1.32 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். அடுத்த 3 நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என்பதால் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் 4271 பேரூந்துகள் மூலமாக மட்டும் தீபஒளி திருநாள் வரை ரூ.5.12 கோடி இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற நகரங்களில் இருந்து இயக்கப்படும் பேரூந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்பதால் இழப்பின் மதிப்பும் குறையும். எனினும், இம்மார்க்கங்களில் இயக்கப்படும் 7688 பேரூந்துகளுக்கும் தலா ரூ.4,000 வீதம் ரூ.3.07 கோடி இழப்பு ஏற்படும். இவை தவிர சிறப்புப் பேரூந்துகளை இயக்குவதற்காக சிறப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் 1,750 பணியாளர்களுக்கான படி, தங்குமிடம் ஆகியவற்றுக்காக ரூ.77 லட்சமும், பல இடங்களில் ஷாமியானா உள்ளிட்ட வசதிகளை செய்வதற்காக ரூ.32 லட்சமும் செலவாகும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்த வகையில் தீபஒளிக்கு முன்பாக ரூ.9.28 கோடி, தீபஒளிக்கு பிறகு ரூ. 9 கோடி என மொத்தம் ரூ.18.28 கோடி இழப்பு ஏற்படும் என போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
திருவிழாக்களின் போதும், இரு மார்க்கங்களிலும் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள சூழல்களிலும் சிறப்புப் பேரூந்துகளை இயக்கும் போது போக்குவரத்துக் கழகங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்; தேவையற்ற இழப்புகள் தவிர்க்கப்படும்.
திருவிழாக்களின் போதும், இரு மார்க்கங்களிலும் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள சூழல்களிலும் சிறப்புப் பேரூந்துகளை இயக்கும் போது போக்குவரத்துக் கழகங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்; தேவையற்ற இழப்புகள் தவிர்க்கப்படும்.
ஆனால், தீபஒளிக்கு ஒரு வழியில் தான் மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால் பெருமளவில் இழப்பு ஏற்படும். அதைக் கருத்தில் கொண்டு திட்டம் வகுத்தால் மட்டுமே இழப்பை தடுக்க முடியாவிட்டாலும், குறைக்கவாவது முடியும். ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும் உள்ள மாற்றுப் பேரூந்துகளை மட்டும் சிறப்புப் பேரூந்துகளாக இயக்கியிருந்தால் பயணிகள் தேவையை பூர்த்தி செய்வதுடன், கணிசமான லாபத்தையும் ஈட்டியிருக்க முடியும்.
கடந்த ஆண்டு தீபஒளி திருநாளுக்காக 9,000 சிறப்புப் பேரூந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் சென்னை நோக்கி வந்த பல பேரூந்துகளில் பயணிகளே இல்லாததால், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தக்கூட பணமின்றி பேரூந்து ஊழியர்கள் தவித்ததும், எதிர்திசையில் வந்த அரசுப் பேரூந்து நடத்துனர்களிடம் கடன் வாங்கி சமாளித்ததும் வரலாறு. அதிலிருந்து பாடம் கற்காத அரசு, இம்முறை சுமார் 12,000 பேரூந்துகளை இயக்கி, போக்குவரத்துக் கழகங்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தப் போகிறது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த அரசுப் பேரூந்துகள் சிறப்புப் பேரூந்துகளாக சென்னைக்கு திருப்பிவிடப்படுவதால் அங்குள்ள மக்கள் பேரூந்து வசதியின்றி அவதிப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தி தனியார் பேரூந்துகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன.
அரசுப் பேரூந்துகள் வழக்கமாக ஓடும் பாதையில் இயக்கப்பட்டிருந்தால் பல கோடி லாபம் கிடைத்து இருக்கும். ஆனால், அதை செய்யாததால் மக்களுக்கு அவதியும், போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பும் தான் பரிசாக கிடைத்திருக்கின்றன. அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் இழப்பில் இயங்கி வரும் நிலையில் தீபஒளி சிறப்பு பேரூந்து இயக்கத்தால் அவை முடங்கும் நிலை ஏற்படும். இதை உணராமல் தொலைநோக்குப் பார்வையின்றி செயல்படும் அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
No comments:
Post a Comment