Wednesday 5 August 2015

மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு எதிரான வழக்கு; வரும் 10 ம் தேதிக்கு ஒத்தி வைப்பு - வைகோ ஆலோசகர் - பசுமைத் தீர்ப்பாயம் அறிவிப்பு திருவைகுண்டம் அணை தூர் வாரும் பணி - வைகோ கோரிக்கை ஏற்பு

சென்னை  தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் திருவைகுண்டம் அணை தூர் வாரும் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஜோயல் சார்பில் வைகோ ஆஜரானார். திருவைகுண்டம் அணை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுவதற்கு முன்பு, மீத்தேன் எரிவாயு குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இது விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு ஆகும். இந்த வழக்கில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில்  ஆஜரான  வழக்கறிஞர்   சங்கமித்திரை  ‘மீத்தேன் திட்டத்தால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லைஎன்று கூறினார்.
அப்பொழுது வைகோ எழுந்து,
மீத்தேன் எரிவாயுத் திட்டம், காவிரி தீரத்தை அடியோடு பாழாக்கும் திட்டம் ஆகும். அதிக ஆழத்தில் குழிகளைத் தோண்டி 635 நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களைத் தண்ணீரோடு கலந்து பலத்த அழுத்தம் கொடுத்துச் செலுத்தப் போகிறார்கள்; அதனால் விளைநிலங்கள் பாழாகும்; தண்ணீர் நஞ்சாகும்; கட்டடங்கள் இடியும். அதனால்தான், அமெரிக்காவில் நியூ யார்க் மாநில ஆளுநர் 2014 டிசம்பர் 17 இல் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை, நியூ யார்க் மாநிலம் முழுமையும் தடை செய்து விட்டார்.
மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கிரேட் Þடர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு ஒப்பந்தம் செய்தது.
நாகை தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் திட்ட அபாயம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, இடைவிடாது ஒரு மாத காலம் ஊர் ஊராகச் சென்று நான் பிரச்சாரம் செய்தேன்; மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தத் திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை.
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் அறிவித்த காலத்திற்குள் மீத்தேன் எரிவாயு திட்டத்தைத் தொடங்காததால், அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் மீத்தேன் எரிவாயு திட்டத்தைக் கைவிடவில்லை.
தற்போது, மேற்கூறிய மூன்று மாவட்டங்களிலும், இராமநாதபுரம் சிவகங்கை அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களிலும் மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ஓஎன்ஜிசி) மூலமாக மீத்தேன் எரிவாயுக் கிணறுகளைத் தோண்டுவதற்கு ஏற்பாடுகளைத் தந்திரமாகச் செய்து வருகிறது. இதனை விவசாயிகளும், பொதுமக்களும், நாங்களும் எதிர்க்கிறோம். எனவே, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தேசிய தீர்ப்பு ஆயம் தடை விதிக்க வேண்டுகிறேன்
என்று கேட்டுக் கொண்டார்.
இதன்பின் அந்த அமர்வில் இருந்த நீதியரசர் ஜோதிமணி அவர்களும், தொழில் நுணுக்க நிபுணர் நாகேந்திரன் அவர்களும் கலந்து பேசி, ‘மீத்தேன் எரிவாயு வழக்கில் பசுமைத் தீர்ப்பு ஆயத்திற்கு, வைகோ அவர்கள் ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்என்று நீதியரசர் ஜோதிமணி அறிவித்தார்.
உடனே வைகோ, ‘என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய கருத்துகளைத் தீர்ப்பு ஆயத்திடம் கூறுவதற்கு எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை மிகப்பெரிய கௌரவமாகக் கருதி நன்றி தெரிவிக்கிறேன்என்றார்.
இதன்பின், தாமிரபரணி ஆற்றில் திருவைகுண்டம் அணைப் பகுதியில் தூர் வாரும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வைகோ கூறுகையில்,
தீர்ப்பு ஆயத்தின் அறிவுறுத்தலின்படி என் கட்சிக்காரர் வழக்கறிஞர் ஜோயல் நேற்று திருவைகுண்டம் அணையைப் பார்வையிட்டார். தூர் வாரும் பணி அணைக்கட்டில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என்றும், ஆனால் எதிர்முனையில் இருந்து தொடங்க பொதுப்பணித்துறை முனையலாம் என்றும் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர். டெண்டர் அறிக்கையில், வேலைத்திட்டம் அணைக்கட்டில் இருந்துதான் தொடங்கப்படும் என்று குறிக்கப்பட்டு உள்ளது. எனவே, அதன்படியே தூர் வாரும் பணியை அணைக்கட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும் எனக் கோருகிறேன். இந்தியப் பொது உடைமைக் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களும், அணைக்கட்டைப் பார்வையிட்டு, இதே கருத்தைக் கூறி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல், தூர் வாரும் பணியை தாமிரபரணி ஆற்றில் நீளவாக்கில் மேற்கொள்ளக் கூடாது; ஒரே சமமான அளவில் அகலவாக்கில் தூர் வாரும் பணி நடக்க வேண்டும்; வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது; எனவே, பணிகளைத் துரிதமாக முடிக்க பொதுப்பணித் துறைக்கு இந்தத் தீர்ப்பு ஆயம் ஆணையிட வேண்டும்
என்று கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கில் ஆஜரான பொதுப்பணித்துறை மேற்பார்வைப் பொறியாளர் அப்துல் ஹமீது அவர்கள், ‘வைகோ கூறியதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; அணைக்கட்டுப் பகுதியில் இருந்துதான் வேலை தொடங்கப்படும்; அகலவாக்கில்தான் வேலை நடக்கும்; மூன்று மாதங்களுக்குள் தூர் வாரும் பணி செய்து முடிக்கப்படும்என்றார்.
வழக்கு விசாரணை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது;
மீத்தேன் வழக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி விசாரணை என அறிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment