மது ஒழிப்புப் போராளி தியாகச் செம்மல் சசிபெருமாள் மதுவின் கொடுமையிலிருந்து தமிழகத்தை விடுவித்து மீட்க தன் வாழ்நாளெல்லாம் போராடியதோடு, அந்த உன்னத நோக்கத்துக்காக உயிர்த்தியாகமும் செய்துவிட்டார்.
நான்கு வயது பாலகன் மது அருந்துவதும், பதினைந்து வயது பெண் மது அருந்திவிட்டு நடுத்தெருவில் ரகளை செய்வதும் எங்கே நடந்தது? பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண்பாட்டை வளர்த்த நம் தாயகமாம் தமிழகத்தில் நடந்தது. கல்லூரி மாணவர்கள் ஏன் சில இடங்களில் மாணவிகள், பள்ளி மாணவர்களும் மது அருந்தத் தொடங்கியிருப்பதை எண்ணினால் எதிர்கால தமிழகம் நரக பூமியாகிவிடும் என்ற அச்சமே மேலோங்குகிறது. பட்டப் பகலில்கூட பெண்களும், தாய்மார்களும் எங்கும் பாதுகாப்பாக செல்ல முடியாத அபாயம் மதுக்கொடுமையால் அச்சுறுத்துகிறது.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பஞ்சமாபாதகங்கள் அனைத்தும் மது அரக்கனால் நாளும் நடக்கின்றன. இதுகுறித்து கவலைப்பட்டு அஞ்சுகிற தமிழக மக்களை பரிவோடு வேண்டுகிறோம். டாÞமாக் மதுக்கடைகளையும், ஒயின்ஷாப்புகளையும் இனியும் நாம் அனுமதிக்கக்கூடாது.
அனைத்து மதங்களும் மதுப்பழக்கம் கூடாது என்றே சொல்கின்றன. தியாகச் சுடர் காமராஜர் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் மதுவை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. அதில் கிடைக்கும் வருமானம் நஞ்சை விட கொடிது என வெறுத்தனர்.
தமிழகம் பாழ்பட்டுவிடக்கூடாதே! என்பதற்காகப் போராடிய உத்தமர் சசிபெருமாள் உயிரற்ற சடலமாகக் கிடக்கிறார்.
200 அடி உயரம் உள்ள அலைபேசி கோபுரத்தில் நெருப்பு வெயிலில் அஞ்சாமல் அவர் நின்றபோது, தமிழகத்தில் மதுவை ஒழிக்க கோபுரத்தின் உயரத்திலிருந்து தடுமாறி விழ நேர்ந்து மடிந்தாலும் தன்னுடைய மரணம் தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தாதா? என ஏங்கியிருப்பார்.
அந்தத் தியாகியின் உயிருக்கு அஞ்சாத ஐந்து மணி நேர போராட்டத்தை அரசு அதிகாரிகள் அலட்சியமாக வேடிக்கை பார்த்தனர். வலுக்கட்டாயமாக அவரை கயிற்றைக் கட்டி இறக்கி சாகடித்தனர்.
விருதுநகர் மாரியம்மன் கோவில் திடலில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தத் தியாகி சங்கரலிங்க நாடாரின் தியாகத்தைக் கருதி, அவரது கனவை நனவாக்க பேரறிஞர் அண்ணா அவர்கள் நமது மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார். வீரத் தியாகி முத்துக்குமார் மரண நெருப்பைத் தழுவி ஈழத் தமிழரைக் காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதுபோல சசிபெருமாளின் உயிர்த் தியாகத்தை மதித்து தமிழகத்தில் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டியது நன்னெறி உள்ளோர் அனைவரின் கடமையாகும்.
ஆகஸ்டு 4 ஆம் தேதி செவ்வாய் கிழமை முழு அடைப்புப் போராட்டத்தின் போது போக்குவரத்துக்கு எந்த இடையூறும் செய்ய நாங்கள் விரும்பவில்லை. பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வழக்கம்போல போக்குவரத்தில் இயங்கலாம். பொதுமக்களுக்கு அதிக சிரமத்தைக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. வணிகப் பெருமக்களுக்கு அதிலும் குறிப்பாக சிறு கடை வியாபாரிகளுக்கு கடை அடைப்புப் போராட்டத்தால் சிரமமும், பொருள் நட்டமும் ஏற்படுவதை எண்ணி மனம் வருந்தினாலும், வணிகப் பெருமக்களின் குடும்பங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் பாதுகாக்க பொருள் நட்டம் உள்ளிட்ட சிரமங்களை வணிகப் பெருமக்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய அவர்களின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம்.
முழு மதுவிலக்கை தமிழகத்தில் ஏற்படுத்த உத்தரவாதமும் நம்பிக்கையும் ஊட்டும்விதத்தில் சசிபெருமாள் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்தி, முழு மதுவிலக்கை செயல்படுத்துகிற நிலைமையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டிலே உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருதி ஆகÞடு 4 முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம்.
முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளின் நிர்வாகிகள் உடனடியாக கலந்து ஆலோசித்து, துண்டு பிரசுரங்கள் தயார் செய்து கடை வீதிகளில் உள்ள சிறுகடை வியாபாரிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களை திங்கட்கிழமை அன்று நேரில் அணுகி முழு அடைப்புப் போராட்டத்தில் காலை முதல் மாலை 6 மணி வரை கடைகளை அடைத்துத் தருமாறு கண்ணியமான முறையில் கேட்டுக்கொள்ள வேண்டுகிறோம்.
இந்த அறப்போரில் எந்த இடத்திலும் துளியளவு வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் அமைதி வழியில் போராட்டத்தை நடத்த உறுதி எடுப்போம். ஆகஸ்ட் 4 முழு அடைப்போடு நின்றுவிடாது எமது போராட்டம். மதுவை ஒழிக்க அறவழிப் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment