Wednesday 12 August 2015

காவிரி பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டம் – அதிர வைத்த 5 தீர்மானங்கள் மத்திய அரசு சதானந்த கவுடாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – தஞ்சையில் வை.கோ தலைமையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்

காவிரி  பாதுகாப்பு  இயக்கக்  கூட்டம்,  அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர்  வைகோ தலைமையில்  தஞ்சையில்  நடைபெற்றது.  பல்வேறு   அரசியல்  கட்சிகளும்,  விவசாய  சங்கங்களும்,  தமிழ்  அமைப்புகளும்  இதில்  பங்கேற்றன. இதில் வெளியிடப்பட்ட தீர்மானங்கள் முற்றிலும் தமிழகர்களின் வாழ்வுரிமைகளை காத்திடவாகவும் அமைந்துள்ளது. மேலும் மத்திய அரசில் பதவி வகிக்கும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் பதவியை பறிக்குமாறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.,
தீர்மானம் 1: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக!
பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நதிநீர் உரிமையை முற்றாகப் பறித்து, உலக நாடுகள் வகுத்துள்ள சட்ட விதிகளுக்கு முரணாகவும், உச்ச நீதிமன்றம் அமைத்த காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு விரோதமாகவும் கர்நாடக அரசு காவிரிக்குக் குறுக்கே மேகதாட்டிலும், ராசிமணலிலும் புதிய அணைகளைக் கட்ட திட்டமிட்டு தொடக்க வேலைகளுக்கு நிதியும் ஒதுக்கி உள்ளது. இந்தப் பிரச்சினையில் கவிரி நடுவர் மன்றம் 2013 பிப்ரவரி 19 ஆம் தேதி வழங்கிய இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்குமுறை ஆணையமும் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.
அப்பொழுது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வாரியத்தையும், ஆணையத்தையும் அமைக்கவில்லை. தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.. அரசு இவைகளை அமைக்கக் கோரி அப்போதைய காங்கிரÞ அரசையும், 2014 இல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அரசையும் வலியுறுத்தியது. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தின. மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. தமிழக அரசு உச்ச நீதிமன்ற்த்தில் இதுகுறித்து வழக்குத் தொடுத்தது. கேரள அரசு இதில் குறுக்குச்சால் ஓட்டியதால் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக, காவிரி மேற்பார்வை குழு அமைத்தது. கர்நாடகம் தமிழகத்துக்குச் செய்யும் கேடுகளை காவிரி மேற்பார்வை குழு தடுக்க முடியாது. காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் சட்டபூர்வ உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தையும் உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்த இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவை பதவி நீக்கம் செய்க!
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு மேகதாதுவிலும், ராசி மணலிலும் புதிய அணைகள் கட்ட முற்பட்டுள்ளது. அப்படி அணைகள் கட்டப்படுமானால், தற்போது தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வருகிற தண்ணீரும் தடுக்கப்பட்டு விடும். கர்நாடக அரசின் தயவை மன்றாடும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுவிடும்.
48 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு கர்நாடகம் கட்ட உத்தேசித்துள்ள புதிய அணைகளால் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை பெங்களூருக்கும், மைசூருக்கும் குடிதண்ணீருக்குக் கொண்டுபோகிறோம் என்று சொல்லிக்கொண்டே புதிதாக பல இலட்சம் ஏக்கர் பாசனத்துக்கு கர்நாடகம் ஏற்பாடு செய்துள்ளது.
கர்நாடகத்தின் அநீதியான இந்தத் திட்டத்தைத் தடுப்பதற்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசிடம் எவ்வளவோ முறையிட்டும்கூட நரேந்திர மோடி அரசு கர்நாடகத்துக்குச் சாதகமாகவும், தமிழகத்துக்குப் பாதகமாகவும் ஓரவஞ்சகம் செய்கிறது.
2014 டிசம்பர் 07, 08 தேதிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் இல்லத்தில் புதிய அணைகள் கட்டுவதற்கான சதி ஆலோசனை நடைபெற்றது. அக்கூட்டத்தில் கர்நாடகத்தின் அனைத்து எம்.பி.க்களும் கலந்துகொண்டதோடு, கர்நாடகத்தைச் சேர்ந்தவரும் மத்திய சட்ட அமைச்சருமான சதானந்த கவுடாவும், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சரான பிரகாஷ் ஜவடேகரும் பங்கேற்றனர்.
புதிய அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு வெளிப்படையாக அனுமதி கொடுப்பதில்லை என்றும், அதே நேரத்தில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதைத் தடுப்பது இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தச் சதித் திட்டம் தற்போது அம்பலத்துக்கு வந்துவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்தபோது, பிரதமரிடத்தில் காவிரி பிரச்சினை குறித்து தமிழகத்தின் நியாயத்தை முதலமைச்சர் விளக்கினார். அடுத்த நாளே கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், கர்நாடக அமைச்சர்களும் மேகதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று கொக்கரித்தனர். இதைவிடக் கொடுமை யாதெனில் மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா புதிய அணைகளைக் கட்ட கர்நாடக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பும் என்றும், மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கும் என்றும், அதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஆணவத்தோடு கூறியுள்ளார்.
அப்படியானால் மத்திய சட்ட அமைச்சர் கூறுவதை பிரதமர் ஏற்றுக்கொள்கிறாரா? அப்படி ஏற்றுக்கொண்டால் தமிழகத்துக்கு அவர் பச்சை துரோகம் செய்கிறார் என்றுதான் பொருள். சதானந்த கவுடா கர்நாடக மாநில அமைச்சர் அல்ல, இந்தியாவின் சட்ட அமைச்சர். தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைப்போம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ள சதானந்த கவுடாவை உடனடியாக மத்திய அமைச்சரவையிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி நீக்க வேண்டும். இல்லையேல், நரேந்திர மோடி அரசு தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்கிற அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.
மத்திய அரசின் இத்தகைய போக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்கே உலை வைக்கும் என இக்கூட்டம் எச்சரிப்பதோடு, காவிரி உரிமையைக் காக்க தமிழக அரசு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் காவிரி பாதுகாப்பு இயக்கம் தோள் கொடுத்துத் துணை நிற்கும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3: தமிழகதின் காவிரி படுகையிலும், பிற இடங்களிலும் மீத்தேன் எரி வாயு,
சேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடுக!
தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும், சிவகங்கை, இராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. மீத்தேன் எரிவாயு அப்படி எடுக்கப்பட்டால் விளைநிலங்களும், சுற்றுச் சூழலும் பாழாவதோடு, கட்டடங்களும் பாதிக்கப்படும். இதனை எதிர்த்து நினைவில் வாழும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களும், விவசாய சங்கங்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராடின. காவிரி பாதுகாப்பு இயக்கம் அரசியல் கட்சிகளின் அடையாளம் இல்லாமல் ஊர் ஊராகச் சென்று விவசாயிகள் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி தொடர் போராட்டங்களை நடத்திய சூழலில், மத்திய அரசு ஒரு ஏமாற்று வேலையைச் செய்தது. குறித்த காலக்கெடுவுக்குள் மீத்தேன் திட்டத்தை தொடங்காததால், கிரேட் Þடர்ன் எனர்ஜி கார்பரேசனோடு போட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடாமல், மறைமுகமாக ஓன்.ஜி.சி. நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த முனைந்தது.
தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இப்பிரச்சினை குறித்து நடைபெற்ற வழக்கில், மீத்தேன் எரிவாயு எடுக்கும் வேலையில் .என்.ஜி.சி. நிறுவனம் ஒருநாளும் ஈடுபடாது என்று தெரிவித்துள்ளது. ஆனால், காவிரி தீரம் தவிர்த்த பிற மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு .என்.ஜி.சி. நிறுவனம் ஒருவேளை முயலக்கூடும்.
தற்போது தமிழகத்துக்கு புதியதோர் ஆபத்து புறப்பட்டுள்ளது. மீத்தேன் எரிவாயு எடுக்க பூமியில் 1500 அடி ஆழம் வரையில்தான் குழி அமைக்கப்படும். சேல் எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டத்தில் 9,500 அடி ஆழம் முதல் 10,500 அடி ஆழம் வரை குழாய் குழிகள் அமைக்கப்பட்டு, அதற்குக் கீழே பாறைகளோடு செதில் செதில்களாக படிந்துள்ள கிரியோஜின் உள்ளிட்ட படிமங்களோடு பெருமளவு தண்ணீரை வேதிப்பொருட்களைக் கலந்து உயர் அழுத்தம் கொடுத்து அந்தக் கரைசலை வெளியே கொண்டுவந்து எண்ணெயும், எரிவாயும் எடுக்கிற திட்டத்திற்கு மத்திய அரசு 2013 அக்டோபரில் .என்.ஜி.சி. நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் செயல்படுத்த முனைந்துள்ளது. இந்த ஆழத்திலிருந்து வெளியே கொண்டுவரப்படும் கரைசல் கொட்டப்படும் இடங்களை நாசமாக்கிவிடும். மீத்தேன் எரிவாயுவைப் போலவே இதுவும் விவசாயத்தை பாழாக்கும்.
காவிரி படுகையில் பெட்ரோல் எடுப்பதை காவிரி பாதுகாப்பு இயக்கம் எதிர்க்கவில்லை. ஆனால், சேல் எண்ணெய் எரிவாயு, மீத்தேன் எரிவாயு எடுப்பதனால் இந்தியாவின் எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம் என்றும், இந்தியாவின் பொருளாதாரத்தை பலப்படுத்தலாம் என்றும் மத்திய அரசும், சில மேதைகளும் கூறுகின்றனர். இந்தியாவின் பொருளாதாரத்தைக் கட்டமைக்க தமிழ்நாடு பலியாடு ஆகக்கூடாது. எனவே தமிழகத்தில் சேல் எரிவாயு, மீத்தேன் எரிவாயு எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்தால் விவசாயிகளும், தமிழக மக்களும் மத்திய அரசின் நடவடிக்கையைத் தடுக்க போராட நேரும் என்பதையும், இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை வழங்காமல் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என காவிரி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4: நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு முற்றாகக் கைவிட வேண்டும்
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே எந்த அரசும் செய்யத் துணியாத அநீதியை நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்ய முற்பட்டுள்ளது. அதுதான் நிலங்களை கையகப்படுத்தும் நில அபகரிப்புச் சட்டம். கோடானு கோடி விவசாயிகளின் நிலங்களைப் பறித்து கார்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களைத் தாரை வார்க்கவும் மத்திய அரசு தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்றம் நடைபெறும் காலத்திலேயே குடியரசுத் தலைவரின் அவசரச் சட்ட பிரகடனங்களை மேற்கொண்டு நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள் அனைவரின் எதிர்ப்பையும் மீறி அநீதியான மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு வரிந்துகட்டிக்கொண்டு செயல்படுகிறது.
பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்த ரௌலட் சட்டத்தைவிட இது மோசமானது. நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு முற்றாகக் கைவிட வேண்டும் என காவிரி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5: நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர் வேலை நிறுத்தம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 13 ஆயிரம் நிரந்தரப் பணியாளர்கள் கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல், புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து, மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்பு முத்தரப்பு பேச்சுவார்த்தை பல கட்டங்களில் நடந்தது. என்.எல்.சி. நிறுவனம் மத்திய அரசின் தலைசிறந்த பொதுத்துறை நிறுவனமாகநவரத்னாதகுதியைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு 1500 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
என்.எல்.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், இன்றியாமையாத தேவையான மின் உற்பத்திக்கும் கடுமையாக உழைத்து வரும் என்.எல்.சி. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்காமல் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது எதேச்சதிகார நடவடிக்கைகளை ஏவி வருகிறது.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் திருமாவளவன், தொழிலாளர் உரிமைப் போராட்டத்தில் முன்னணியில் நின்றதால், அவரை என்.எல்.சி. நிர்வாகம் நிரந்தரமாக பணிநீக்கம் செய்திருக்கிறது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை வன்மையான கண்டனத்துக்குரியது. 23 நாட்களாக போராடி வரும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகத் தீர்வு காண என்.எல்.சி. நிர்வாகத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும், தொழிற்சங்கத் தலைவர் திருமாவளவன் மீதான பணி நீக்க நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்றும் காவிரி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துகிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment