Thursday, 20 August 2015

இலங்கை - தேசிய அரசு அமைக்க சுதந்திர கட்சி ஒப்புதல்- ராஜபக்சேவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆசைக்கும் வேட்டு

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிசேனவின் சுதந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைக்க முடிவு செய்துள்ளது. தேசிய அரசு அமைப்பது தொடர்பாக ஆராய முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை சுதந்திர கட்சி அமைத்துள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியாவது கிடைக்கும் என்ற ராஜபக்சேவின் கனவு தகர்ந்து போய்விட்டது. 
இலங்கையில் ஒரு கட்சி ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. தற்போது நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 இடங்கள்தான் கிடைத்தன. இதனால் எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ரணிலுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ரணில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவது எனவும் ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் இரு பிரதான கட்சிகள் இணைந்து அமைக்கும் தேசிய அரசு உருவாகிறது. அத்துடன் தேசிய அரசு அமைப்பது தொடர்பாக முன்னாள் அதிபர் சந்திரிகா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவையும் சுதந்திர கட்சி அமைத்துள்ளது. சுதந்திர கட்சியின் இந்த முடிவால் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமருவேன் என்று கூறிக் கொண்டிருந்த மகிந்த ராஜபக்சேவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக சுதந்திரக் கட்சி செயல்பட்டால் எப்படியும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு கிடைத்துவிடும் என கனவு கண்டவர் மகிந்த ராஜபக்சே. இப்போது ரணில்- சிறிசேன இருவரும் கூட்டாக ராஜபக்சேவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வேட்டு வைத்துவிட்டனர். இதனால் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிசேனவின் சுதந்திரக் கட்சிக்கு அடுத்த 3வது பெரிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பே இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனே பிரதான எதிர்க்கட்சித் தலைவராகும் நிலைமை உருவாகி உள்ளது.

No comments:

Post a Comment