Friday 7 August 2015

போயஸ் கார்டனில் முதல்வர் ஜெ.வுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடி தான் பதவியேற்ற பிறகு முதன் முறையாக அரசு நிகழ்ச்சிக்கு இன்று தமிழகம் வந்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது காவிரி பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய 21 பக்க மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று முதல் முறையாக தமிழகம் வருகை தந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ரோசையா, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கைத்தறி தின நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்கலைக் கழகம் செல்லும் வழியில் அதிமுகவினர் மற்றும் பா.ஜ.கவினர் இணைந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை பல்கலைக் கழகத்தில் கைத்தறி தின நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேராக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பிரதமர் மோடியை இருகரம் கூப்பி வரவேற்று சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது காவிரி, முல்லைப் பெரியாறு, நொய்யல் ஆறு, மீனவர் பிரச்சனை, நதிநீர் இணைப்பு உள்ளிட்டவை அடங்கிய தமிழகத்தின் கோரிக்கைகள் தொடர்பான 21 பக்க மனுவை பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா வழங்கினார். கோரிக்கைகள் என்ன? அந்த மனுவில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசின் தொழிலகப் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும்; நெய்யாற்றில் இருந்து தமிழகத்துக்கு கேரளா தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்; காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தமிழகத்தின் ஒப்புதலின்றி அணை கட்டக் கூடாது என கர்நாடகாவை அறிவுறுத்த வேண்டும்; ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும்; சரக்கு சேவை வரியில் இருந்து பெட்ரோல், துணை பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. இதன் பின்னர் ஜெயலலிதா இல்லத்தில் பிரதமர் மோடிக்கு மதிய உணவு விருந்தளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு பூங்கொத்து கொடுத்து வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. போயஸ் தோட்ட இல்லத்தில் சுமார் 50 நிமிடங்கள் பிரதமர் மோடி- ஜெயலலிதா இடையேயான சந்திப்பு நடைபெற்றது

No comments:

Post a Comment