வேளாண்மைக்கும், விளை நிலங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கேடு செய்யும் வேலிக் காத்தான் எனப்படும் வேலிக் கருவேல் மரங்களை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தூருடன் பிடிங்கி அடியோடு அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், 08.08.2015 சனிக்கிழமை அன்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் தண்ணீர் விநியோகத்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து பின்வருமாறு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
“தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் பல்வேறு இடங்களில் பயனில்லாமல் நீர்வளத்தையும், சுற்றுச் சூழலையும் கெடுத்துக்கொண்டிருக்கும் சீமை கருவேல் மரம், சீமை ஒடை, வேலி காத்தான் போன்ற மரங்களை அகற்றி தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைக் காப்பாற்ற வேண்டும். மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே இது சம்மந்தமாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுவின் மேற்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வைகை ஆற்றில் மற்றும் நீர் படுகைகளில் உள்ள மரங்களை அகற்ற இடைக்கால உத்தரவிட்டுள்ளது. மேற்படி வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
மேற்படி சீமை கருவேல் மரம், சீமை ஒடை, வேலி காத்தான் போன்ற மரங்களால் தமிழ்நாட்டின் நீர் ஆதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், சீமை கருவேல் மரம், சீமை ஒடை, வேலி காத்தான் போன்ற மரங்களை தமிழ்நாட்டின் அனைத்து நீர் நிலைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து உடனடியாக அகற்றி தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், நீர் வளத்தையும் காப்பாற்ற முன்வரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தின் நகல் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment