வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-ம் கட்டமாக சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் படிவம்-6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம்-7-ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம்-8-ஐ பூர்த்தி செய்தும், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-8 ஏ- யினை பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர், கரூர் நகராட்சி அலுவலரின் அலுவலகத்தில் வருகிற 14-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கடந்த மாதம் 20-ந் தேதி முதலாவது சிறப்பு முகாம் வாக்கு சாவடி மையங்களில் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள தவறியவர்கள் அடுத்த சிறப்பு முகாம் வரை காத்திருக்காமல் இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர்களின் வசதிக்காக மேலும் இரண்டு சிறப்பு முகாம்கள் 4-ந் தேதி (இன்று) மற்றும் 11-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடைபெற உள்ளது. 2-ம் கட்ட முகாம் இன்று நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவைகளை மேற்கொண்டு பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6-ஐ பூர்த்தி செய்யும் போது, இப்படிவத்தில் பத்தி-4-ல் உள்ள உறுதிமொழியை தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டும். ஏனெனில், இந்த உறுதிமொழியில் மனுதாரரது முந்தைய முகவரியில் வாக்காளராக இடம் பெற்ற விவரம் மற்றும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த விவரங்கள் குறிப்பிடப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது’’என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment