Saturday, 3 October 2015

லாரி ஸ்டிரைக் காரணமாக திண்டுக்கல்லில் 280 டன் வெங்காயம் தேக்கம்




நாடு முழுவதும் நடைபெற்று வரும் லாரி ஸ்டிரைக் காரணமாக திண்டுக்கல்லில் 280 டன் வெங்காயம் தேக்கம் அடைந்துள்ளது.
சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 4–வது நாளாக லாரிகள் ஓடவில்லை. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிகப் பெரிய வெங்காய சந்தை திண்டுக்கல்லில் உள்ளது. 150–க்கும் மேற்பட்ட மண்டிகள் கொண்ட இந்த வெங்காய சந்தை திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் செயல்படும். திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
சந்தை நாட்களில் சுமார் 4 ஆயிரம் மூட்டை சின்ன வெங்காயம் வரும். மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 425 டன் பெரிய வெங்காயம் வரும். இங்கிருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வெங்காயம் அனுப்பப்படும்.
கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் லாரி ஸ்டிரைக் காரணமாக சுமார் 100 டன் சின்ன வெங்காயம் மற்றும் 130 டன் பெரிய வெங்காயம் திண்டுக்கல் வெங்காய சந்தையில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள், தரம் பிரிக்கும் பெண்கள் என உபதொழிலில் ஈடுபடும் 1500–க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
இது குறித்து வெங்காய ஏற்றுமதியாளர் சவுந்தர ராஜன் கூறுகையில், லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் முதல் நாளில் சந்தை பாதிக்கப்பட வில்லை. தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நீடிப்பதால் வெங்காயத்தை வெளியிடங்களுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2 நாட்களில் அழுகும் தன்மை கொண்ட வெங்காயத்தை அதிக நாட்கள் தேக்கி வைக்க முடிய வில்லை. இதன் காரணமாக ரூ.1 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். 

No comments:

Post a Comment