Sunday, 4 October 2015

4 வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக்: கரூரில் மட்டும் ரூ.5 கோடி கொசுவலைகள் தேக்கம் தலைவர் மலையப்பசாமி கவலை



 நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் 4 வது நாளாக நடந்து வருவதால், கரூரில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான, கொசு வலை தேக்கம் அடைந்துள்ளது.
தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் தான் கொசுவலை உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. கரூரில் உற்பத்தியாகும் கொசுவலைகள், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக கொசுவலைகள் லாரிகள் மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள துறைமுகங்களுக்கு அனுப்பப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 1ம் தேதி முதல், நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக லாரி ஸ்டிரைக் நடந்து வருவதால், கரூரில் இருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொசுவலை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட, பல கோடி ரூபாய் மதிப்பிலான கொசுவலைகள் தேங்கி கிடக்கிறது.

இதுகுறித்து, கரூர் பிளாஸ்டிக் கொசுவலை நூல் மற்றும் கொசுவலை தயாரிப்பாளர் நலச்சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான மலையப்பசாமி கூறியதாவது: கடந்த மூன்று நாட்களாக லாரி ஸ்டிரைக் நடந்து வருவதால், உற்பத்தி செய்யப்பட்ட கொசுவலைகளை, வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. உற்பத்தி செய்யப்பட்ட, 5 கோடி ரூபாய் மதிப்பிலான கொசுவலைகள், பேக்கிங் முடிந்த நிலையில் தேக்கம் அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், குறிப்பிட நேரத்தில் ஆர்டர்களை முடித்து அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு லாரி உரிமையாளர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே உற்பத்தி தேங்கியுள்ள நிலையில், லாரி ஸ்டிரைக் தொடரும் பட்சத்தில், கொசுவலை உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை வரும். இதனால், கரூர் மாவட்டத்தில் கொசுவலை உற்பத்தியில் மறைமுகமாகவும், நேரிடையாகவும் ஈடுப்பட்டுள்ள, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். உற்பத்தி நிறுத்தப்பட்டால், இதை நம்பியுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் வருமான இழப்பு ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment