Sunday, 4 October 2015

ஈழத்தமிழர்களின் துயர் தீர இரண்டு வழிகள் மட்டுமே உண்டு : தழிழருவி மணியன்



காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

     ’’ மனித உரிமை மீறல் பற்றி உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் சிறீசேனா அறிவித்திருப்பது எந்த வகையிலும் நமக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.  தமிழின அழிப்பில் ஈடுபட்டிருக்கும் இலங்கை அரசு ஒருபோதும் நேர்மையான முறையில் நியாயமான விசாரணையை நடத்தாது என்பதை சர்வதேச சமூகம் உணர வேண்டும். 

 இலங்கை நீதிமன்றங்களின் நம்பகத்தன்மையை மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் உசேன், தான் சமர்ப்பித்த அறிக்கையில் கேள்விக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றி முழுக்க முழுக்க உள்நாட்டு விசாரணையே மேற்கொள்ளப்படும் என்ற சிறீசேனாவின் அறிவிப்பு, விசாரணையின் நோக்கையும் போக்கையும் இப்போதே நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது.   
 
          ஈழத்தமிழர்களின் துயர் தீர இரண்டு வழிகள் மட்டுமே உண்டு.  புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சர்வதேச அளவில் அறவழியில் போராடி அழுத்தம் தரவேண்டும்.   தாயகத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஓரணியில் நின்று  ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும்.   ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் நடத்துவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.  ஆனால் நம் இனம், மொழி மற்றும் உரிமை சார்ந்து ஏற்படும் பிரச்சினைகளில் தீர்வு காண கட்சி ரீதியாகப் பார்வையைத் திருப்புவதைக் கைவிட வேண்டும்.  
        
  மூன்றாவது முறையாகப் பதவியேற்ற நாள் தொட்டு இன்றுவரை நம் முதல்வர் ஜெயலலிதா ஈழப்பிரச்சினையில் தொடர்ந்து தெளிவான அணுகுமுறைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.   ஒட்டுமொத்த தமிழினத்தின் வரவேற்பைப் பெறும்  வகையில்  முதல்வர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு புதுடில்லியில் பிரதமரைச் சந்தித்து தார்மிக அழுத்தத்தைத் தந்தாக வேண்டும்.  இந்திய அரசு  அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சர்வதேச நாடுகளின் மூலம் நியாயமான விசாரணையை இலங்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தமிழகத்தின் சார்பில் இந்த அரசியல் அழுத்தத்தை உருவாக்க வேண்டிய கடமை நம் முதல்வருக்கு இருக்கிறது. 
 
          அனைத்துத் தலைவர்களோடும் பிரதமரைச் சந்தித்து அழுத்தத்தைத் தருவதன் மூலம் ஈழத்தமிழருக்கான நியாயங்கள் கிடைப்பதற்கும் வழி பிறக்கும்.  முதல்வர் ஜெயலலிதாவுக்கும் உலகத்தமிழர்களின் பேராதரவு பல்கிப் பெருகும்.  விருப்பு வெறுப்பு கடந்த நிலையில் முதல்வர் இந்தப் பரிந்துரையை ஏற்றுச் செயற்பட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.  ’’ என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment