பிஹார் சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு இன்று (திங்கள்கிழமை) காலை 7.10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
பாரியா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது வாக்கை பதிவு செய்தார்.
மோடி அழைப்பு:
தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், " பிஹார் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் திரளாக கலந்துகொண்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
மொத்தம் 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் வெற்றி தோல்வியை 1.35 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.
நவம்பர் 8-ல் வாக்குப்பதிவு:
மொத்தம் 243 உறுப்பினர்கள் கொண்ட பிஹார் சட்டப் பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. வரும் 16-ம் தேதி 2-வது கட்டத் தேர்தலும், 28-ம் தேதி 3-வது கட்ட தேர்தலும், நவம்பர் 1-ம் தேதி 4-வது கட்ட தேர்தலும் 5-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடக்கின்றன. நவம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் ஆளும் ஐஜத.வின் நிதிஷ்குமார் தலை மையில் மெகா கூட்டணி அமைக் கப்பட்டுள்ளது. இதில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல பாஜக.வும் ராம் விலாஸ் பாஸ்வான், முன்னாள் முதல்வரும் ஐஜத அதிருப்தி தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோருடன் கூட்டணி சேர்ந்து தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளது.
இந்தத் தேர்தலில் கால் பதிக்க இடதுசாரிகளும் களத்தில் இறங்கி உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சிபிஐ-எம்எல், பார்வர்டு பிளாக், எஸ்யுசிஐ (சி), ஆர்எஸ்பி ஆகிய 6 கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
வழக்கத்துக்கு மாறாக இந்தத் தேர்தலில் பிரச்சாரம் காரசாரமாக இருந்தது. நிதிஷையும் லாலுவையும் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்து பேசினார். பதிலுக்கு அவர்களும் மோடியையும் பாஜக.வையும் விமர்சித்தனர். மேலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, மாநில தலைவர் சுஷில் குமார் மோடி, நந்த கிஷோர் யாதவ் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் தீவிர பிரச்சாரம் செய்தனர். ஐஜத கூட்டணி சார்பில் நிதிஷ், லாலு, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
பரபரப்பான சூழ்நிலையில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது. இதுகுறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.லட்சுமணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிஹாரில் முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இவற்றில் 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 54 பேர் பெண்கள். இந்த தொகுதிகளில் ஒரு கோடியே 35 லட்சத்து 72 ஆயிரத்து 339 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 72 லட்சத்து 37,253 பேர் ஆண்கள், 63 லட்சத்து 17,602 பேர் பெண்கள், 405 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க 13 ஆயிரத்து 212 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடியும். ஆனால், நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கேற்ப மாலை 4 மணி அல்லது பிற்பகல் 3 மணியுடன் வாக்குப் பதிவு முடித்துக் கொள்ளப்படும்.
ஒவ்வொரு வாக்குச் சாவடி யிலும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டிரோன் (ஆளில்லா சிறிய விமானம்), ஹெலிகாப்டர்கள் மூலம் வாக்குப் பதிவை கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தேர்தல் அதிகாரி லட்சுமணன் கூறினார்.
No comments:
Post a Comment