தருமபுரியில் குட்டையில் மூழ்கி 5 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்துக்கு பாமக தருமபுரி தொகுதி எம்.பி. அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பென்னாகரம் ஒன்றியத்துக்குட்பட்ட சின்னப்பூம்பள்ளம் என்ற இடத்தில் தடுப்பணையில் துணி துவைக்கச் சென்ற 5 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவிக் குழந்தைகளின் உயிரிழப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தக் குழந்தைகளின் ஊரான நலப்பரmபட்டியில் துணி துவைக்கும் அளவுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்திருந்தால் அவர்கள் துணி துவைப்பதற்காக தடுப்பணைக்கு சென்றிருக்க மாட்டார்கள்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலால் கடந்த ஆட்சியில் ஒகனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அரைகுறையாக பணிகள் முடிந்திருந்த நிலையில் இத்திட்டத்திற்கு திறப்பு விழா நடத்தப்பட்டது.
ஆனால், இத்திட்டத்தின்படி தருமபுரி மாவட்ட மக்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது.
குடிநீர் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காக அந்த ஊரில் இரு ஆழ்துளைகிணறுகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் அவற்றில் ஒன்று வேலை செய்யவில்லை.
மேலும், நலப்பரம்பட்டியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைக்கப்படாததால், கிராம மக்கள் அனைவரும் தடுப்பணைக்கு சென்று துணி துவைப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விட்டது.
இப்படி ஒரு சூழல் ஏற்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணமாகும். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இதுபோன்ற உயிரிழப்புகள் இனியும் ஏற்படாமல் தடுக்கத் தேவையாப ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி உயிரிழந்த 5 குழந்தைகளின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு தலா ரூ. 10 லட்சம் வீதம் இழப்பீடு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
'நிவாரண நிதி வழங்குக'
தருமபுரி சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் அஞ்சேஅல்லி ஊராட்சி, காட்டு நாய்க்கண்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவிகள் 5 பேர் ஒரே நேரத்தில் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
முதலில் குளத்தில் இறங்கியவர் உயிர்க்கு போராடிய போது அவரை காப்பற்றும் முயற்சியில் ஒருவர் பின் ஒருவராக ஈடுப்பட்டு மற்ற 4 பேரும் நீரில் மூழ்கி மூச்சி தினறி பரிதாபமாக உயிர் இழந்துள்ள செய்தி ஆற்றொணத் துயரத்தை ஏற்படுத்துக்கிறது.
குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பத்தருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு நிவராண நிதி வழங்கி உதவுமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment