அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–
அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கடந்த 2011–ல் இருந்ததை விட இப்போது 100 முதல் 250 சதவீதம் வரை விலை உயர்ந்து விட்டது. ஆட்சிக்கு வரும்போது விலைவாசியை கட்டுப்படுத்துவோம். பதுக்கினால் தடுப்போம் என்றார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.300 முதல் 350 கோடியும், உளுத்தம் பருப்பு கொள்முதலில் ரூ.750 கோடியும் ஊழல் நடந்து உள்ளது. இதுபற்றி ஏற்கனவே கவர்னரிடம் புகார் மனு கொடுத்து உள்ளோம். விலைவாசி உயர்வுக்கு இந்த ஊழலும் ஒரு காரணம். உற்பத்தி குறைவுக்கு விவசாய துறை மீது அரசின் அலட்சிய போக்கே காரணம்.
வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து தேர்தல் அலை வீச தொடங்கி விடும். இரு திராவிட கட்சிகளுக்கும் ஆளத்தகுதியில்லை.
நல்ல கட்சி, முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் கட்சி, வளர்ச்சி அரசியலை பேசும் கட்சி, புதுக்கட்சி, ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் மாற்றம் முன்னேற்றம் என்று மக்களிடம் செல்கிறோம். கண்டிப்பாக 2016 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
பொது விநியோகத்தில் அரிசி, பருப்பு எதுவும் இல்லை எல்லாமே அம்மா உணவகங்களுக்கு செல்வதாக கூறுகிறார்கள். மத்திய தர வர்க்கத்தினரும் வாங்கும் வகையில் பொது விநியோகத்தில் தரமான பொருட்களை விற்பனை செய்தால் விலைவாசி குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. துணைத் தலைவர்கள் ஈகை தயாளன், ராமமுத்துக்குமார், பொருளாளர் அக்பர் அலி, இளைஞர் அணி துணைத்தலைவர் மாம்பலம் வினோத் நாடார், சென்னை மண்டல அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன், ராசே வெங்கடேசன், வி.ஜே.பாண்டியன், ஏழுமலை, சத்யா, பசுமை தாயகம் துணை அமைப்பாளர் எஸ்.கே.சங்கர், சகாதேவன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment