கருகும் பயிரை காப்பாற்ற நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடகத்திலிருந்து தண்ணீரை பெற்று தரவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும். கர்நாடகத்தில் மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு, ஷேல் வாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தின் சார்பில் திருவாரூர் தெற்குவீதியில் திங்கள்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மக்கள் நல கூட்டியக்க ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வைகோ பேசுகையில், சாதி பெயரால் இளைஞர்களை தூண்டிவிடுபவர்களிடம் நான் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து கேடு செய்யாதீர்கள். வாக்கு வாங்க வேறு வழியை கையாளுங்கள். நான் கொள்கைக்காக சிறையில் இருந்து இருக்கிறேன். மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் கால் வலிக்க நடந்துள்ளேன். அப்போது நான் ம.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னது கிடையாது. எந்த கட்சிக்கும் வாக்களியுங்கள். மதுவை ஒழிக்க வாருங்கள் என்று தான் கூறினேன்.
திருவாரூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் என்ன பேசுகிறார்கள் என்று யார் கேட்கிறார்களோ இல்லையோ தி.மு.க. தலைவர் கலைஞர் கேட்டு கொண்டிருப்பார். எனக்கு எந்த கசப்புணர்வும் யார் மீதும் இல்லை. இந்த கூட்டியக்கத்தில் உள்ள 4 கட்சிகள் அசைக்க முடியாத சக்திகள். இதனால் மக்கள் நல கூட்டியக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. 2016 தேர்தலை குறிக்கோளாக கொண்டு இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. மக்கள் பிரச்சினைக்காக தொடங்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 திசைகளால் தான் இந்த உலகம் இயங்குகிறது. மனித குலம் இயங்குகிறது. அதேபோல் தான் எங்கள் இயக்கத்தில் உள்ள 4 கட்சிகள். தமிழகம் ஊழல் மலிந்த மாநிலமாக மாறிவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க.வை நான் குறை சொல்லவில்லை. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. தலைமையை எதிர்த்து போராடுகிறோம்.
2016 தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கம் முடிசூட போவதற்கு அடையாளமாக தான் இங்கே கூட்டம் போட்டு இருக்கிறோம். ஜெனிவாவில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. முதல்–அமைச்சர் கனவில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த தி.மு.க. பொருளாளர் ஒரு இடத்தில் கூட ஜெனிவா தீர்மானத்தை பற்றியோ, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்றோ பேசவில்லை.
செங்கொடியுடனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் கைகோர்த்து இருப்பது சந்தோசமாக இருக்கிறது. நாங்கள் உறுதியாக ஜெயிப்போம். எதிர்ப்பார்த்த காலத்தில் வெற்றி கிடைக்கவில்லை. எதிர்பாராத காலத்தில் வெற்றி வரும். தேர்தல் வெற்றிக்கு பிறகு மக்கள் நல கூட்டியக்கத்தின் முதல் கூட்டம் திருவாரூரில் தான் நடைபெறும் என்றார்.
No comments:
Post a Comment