Sunday, 11 October 2015

சிறந்த பண்பாளர் மனோரமா: நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் இரங்கல்


திரைப்பட நடிகை மனோரமா மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமாறு: 

தமிழ் திரையுலகில் சகாப்தம் படைத்து, ஆச்சி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டு, என்னுடைய பல திரைப்படங்களில் நடித்தவருமான எனது பெரும் மரியாதைக்குரிய திரு. மனோரமா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியினை கேட்டு, பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், சுமார் 1200-க்கும் மேற்பட்ட தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்று, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். 

கலைத்துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதும் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும்’, சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருதும்’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருதும்’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதும்’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருதும்’, ‘என்.எஸ்.கே விருதும்’, ‘எம்.ஜி.ஆர். விருதும்’, மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளும் என பல விருதுகளைப் பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் நடித்து தனக்கே உரித்தான முத்திரையை பதித்துள்ளார்.

பழகுவதற்கும், நட்பு பாராட்டுவதற்கும் இனிமையானவர், எளிமையானவர். சிறந்த பண்பாளர். இப்படி எல்லா வகையிலும் சிறப்பு பெற்றவரான ஆச்சி மனோரமாவின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, இந்திய திரையுலகிற்கும், குறிப்பாக தமிழ் திரையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தேமுதிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் நடிகரும், தே.மு.தி.க நிறுவனத்தலைவருமான விஜயகாந்த்.

No comments:

Post a Comment