தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
’’இந்தியாவில் மாணவர்களை கொண்டு மாற்றத்தை கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள். மிக உயர்ந்த பதவியை வகித்தபோதும், அவர் அளித்த பேட்டியில் தான் ஒரு ஆசிரியராக அறியப்படுவதே தனக்கு பெருமை என்று கூறியவர். அவர் நினைத்தபடியே தன்வாழ்நாளெல்லாம் மாணவர்களோடு கலந்துரையாடுவதும், அவர்களுக்கு எதிர்காலத்தின்மீது நம்பிக்கையூட்டும் அறிவுப்பூர்வமான கருத்துகளை கூறி வந்தவர். தன்னுடைய இறுதி மூச்சுவரை மாணவர்களுடன் இரண்டறக் கலந்திருந்தார் என்பதால்தான், அவரது பிறந்தநாளை “மாணவர் தினமாக” கொண்டாட வேண்டுமென்று 01.08.2015 அன்று கோரிக்கை விடுத்தேன். மேலும் தேமுதிக சார்பில் “மாணவர் தினமாக” ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் என்றும் தெரிவித்திருந்தேன்.
எனவே தேமுதிகவின் அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழகங்கள் சார்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், 15.10.2015 வியாழக்கிழமையன்று தமிழகம் முழுவதும் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியும், மரக்கன்றுகளை நடுதலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலாம் அவர்களின் புத்தகங்கள், பள்ளி சீருடைகள், நோட்டு, புத்தகங்கள், ஜாமெண்ட்ரி பாக்ஸ், பேனா, பென்சில் போன்ற பல்வேறு பொருட்களை வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ’’ என தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment