திருப்பதி ஜீவகோனா மங்கலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் கும்பலின் நடமாட்டம் இருப்பதாக, செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் மங்கலம் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூபால் என்ற இடத்தில் கார் ஒன்று சந்தேகப்படும்படியாக நின்றதை கண்டறிந்தனர்.
காரின் அருகே போலீசார் சென்ற போது, அங்கிருந்த கடத்தல் கும்பல் திடுக்கிட்டு நாலாபுறமும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கடத்தல் கும்பலின் கார் மட்டும் சிக்கியது.
காரை சோதனை செய்தபோது, அதில் முதல் ரகமுள்ள 9 செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கார் நின்றிருந்த இடத்தில் கடத்தல் கும்பல் சாப்பிடுவதற்காக சமைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காருடன் செம்மரக் கட்டைகளை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பிடிபட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
பறிமுதல் செய்த செம்மரக் கட்டைகளை போலீசார், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய கடத்தல் கும்பலையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment