கிருஷ்ணகிரியில் மாவட்டம் மாத்தூரில் நேற்று இரவு கொட்டும் மழை என்றும் பார்க்காமல் பா.ம.க வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு இன்று (05-11-15) பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. ஒரு அணியாகவும், தி.மு.க. ஒரு அணியாகவும், பா.ஜ.க. ஒரு அணியாகவும், மக்கள் நல இயக்கம் ஒரு அணியாகவும், நாங்கள் ஒரு அணியாகவும் போட்டியிட இருக்கிறோம்.
எங்கள் தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். தி.மு.க.கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது, நல்ல நிலைப்பாடாகும். 1957–க்கு பிறகு தொடர்ந்து 58 ஆண்டுகளாக தி.மு.க. தனியாக நின்றதில்லை. எனவே இந்த தேர்தலில் தி.மு.க. தனியாக போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.
சென்னை வேளச்சேரி வணிகவளாகம் வாங்கியதில் கடந்த தி.மு.க ஆட்சியில் ரூ.150 கோடி சலுகை காட்டி உள்ளது.
அது குறித்தும் தமிழக அரசு விசாரிக்க வேண்டும்.
மக்களுக்கு தமிழக அரசின் மீது நம்பிக்கையில்லை. நீதிமன்றத்துக்கும் நம்பிக்கையில்லை. சென்னை நீதிமன்ற பாதுகாப்பு குறித்தும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழக போலீஸ் மேல் நம்பிக்கையில்லை. அதனால் தான் சென்னை உயர் நீதிமன்றம் மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளது.
2011–ம் ஆண்டு முதல் இதுவரை 9228 கொலைகள் மற்றும் 97 ஆயிரம் கொள்ளைகள் நடந்துள்ளன. அதனை தமிழக காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை.
வேலூரில் அதிகமாக மணல் கொள்ளை நடந்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் தி.மு.க. ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் மணல் கொள்ளை அதிகமாக நடந்துள்ளது. ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் அல்ல. ஊழல் செய்வதிலும் சளைத்தவர்கள் அல்ல.
இதில் கோடிக்கணக்கில் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் 50 சதவீதம் டாஸ்மாக்கு சரக்குகள் சப்ளை செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment