Saturday, 7 November 2015

வைகோ தாயார் மாரியம்மாள் உடல் கலிங்கப்பட்டியில் தகனம்! - அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்




ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவின் தாயார் மறைந்த மாரியம்மாள் உடல் கலிங்கப்பட்டியில் இன்று தகனம் செய்யப்பட்டது. வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் நல குறைவு காரணமாக பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு 3 மகள்களும், வைகோ, கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். வைகோவின் தாயார் உடல் நலக்குறைவு தகவல் நேற்று அதிகாலை சென்னையில் இருந்த வைகோவிற்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். காலை 10.50 மணிக்கு பாளை. மருத்துவமனைக்கு வந்த வைகோ தனது தாயாரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் காலை 11.10 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் மாரியம்மாளின் உடல் கலிங்கப்பட்டி கொண்டு செல்லப்பட்டது. கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மாரியம்மாளின் உடல் வைக்கப்பட்டுள்ளது. வைகோவின் வீட்டுக்கு நேற்று மாலை கனிமொழி எம்பி, வந்து அவரது தாயார் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வைகோ குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல் கூறினார். கலிங்கப்பட்டியில் இறுதி அஞ்சலி வைகோ தாயார் மாரியம்மாள் உடலுக்கு தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் மாரியம்மாளின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கலிங்கப்பட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment