பீகார் மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ந்தேதி முதல் கடந்த 5–ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் 272 பெண்கள் உள்பட 3,450 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லல்லுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் கொண்ட மெகா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
மொத்தம் உள்ள 6 கோடியே 68 லட்சம் வாக்காளர்களில் 56.80 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும், 62,780 மின்னணு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 39 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. மூன்றடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்புடன் 14 ஆயிரத்து 580 பேர் ஓட்டுக்களை எண்ணினார்கள். முதலில் தபால் ஓட்டுக்களை எண்ணி முடித்து விட்டு, பிறகு முகவர்கள் முன்னிலையில் மின்னணு எந்திரங்களில் உள்ள ‘‘சீல்’கள் அகற்றப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகளும், ஓட்டுப்பதிவு தினத்தன்று நடத்தப்பட்ட வாக்கு கணிப்புகளும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டன. இதனால் பீகாரில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு இன்று காலை முதலே நாடெங்கும் நிலவியது. காலை 8.15 மணிக்கு பீகார் தேர்தல் முன்னிலை நிலவரம் வெளியாகத் தொடங்கியது.
முதல் தொகுதி முன்னிலை நிலவரம் தெரியவந்தபோது அதில் பா.ஜ.க. வேட்பாளர் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த முன்னிலை நிலவரங்களும் பா.ஜ.க.வுக்கு சாதகமாக வந்தன. 9 மணிக்கு 83 தொகுதிகள் முன்னிலை நிலவரம் தெரிந்தது.
அதில் 55 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 21 தொகுதிகளில் மெகா கூட்டணியும் முன்னிலை பெற்றிருந்தன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பா.ஜ.க. தொண்டர்கள் பட்டாசு வெடிக்க தொடங்கினார்கள்.
9.30 மணிக்கு முன்னிலை நிலவரத்தில் மாறுபட்ட தகவல்கள் வெளியானது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலைப் பெற்றன. இதனால் தொலைக் காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெவ்வேறு விதமாக வெற்றி தகவல்கள் வெளியிடப்பட்டது.
10 மணியளவில் 243 தொகுதிகளின் முன்னிலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணி, பா.ஜ.க. கூட்டணியை முந்தியது.
மெகா கூட்டணி 145 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. பா.ஜ.க. கூட்டணி 88 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று பின் தங்கியது.
பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் வேண்டும். நிதிஷ்குமாரின் மெகா கூட்டணி 145 இடங்களில் முன்னிலை பெற்றதால், அந்த கூட்டணி பீகாரில் ஆட்சியைப் பிடிப்பது உறுதியானது.
10 மணியளவில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர்களிடையே உற்சாகம் கரை புரண்டோடியது. அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வினியோகித்தும் வெற்றியைக் கொண்டாடினார்கள்.
11 மணி நிலவரப்படி நிதிஷ்குமாரின் மெகா கூட்டணி 145 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலை சென்றது. பா.ஜ.க. 88 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று கடும் பின்னைடவை சந்தித்தது. இதன் மூலம் மெகா கூட்டணி ஆட்சி அமைப்பது வலுவாக உறுதிப்படுத்தப்பட்டது.
மதியம் 12.30 மணி நிலவரப்படி நிதிஷ்குமாரின் மெகா கூட்டணி 157 இடங்களை கைப்பற்றும் நிலையில் இருந்தது. பா.ஜ.க. 76 இடங்களுக்கு சரிந்தது. எனவே ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி பீகாரில் புதிய ஆட்சியை அமைக்கிறது.
மூன்றாவது முறையாக நிதிஷ்குமார் மீண்டும் பீகார் முதல்–மந்திரி ஆகிறார். வெற்றி தகவல்கள் குவியத் தொடங்கியதும் பாட்னாவில் உள்ள அவர் வீட்டுக்கு ஐக்கிய ஜனதா தளம் நிர்வாகிகள் படையெடுத்தனர். நிதிஷ்குமாருக்கு மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நாடெங்கும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நிதிஷ்குமாரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
நாளை அல்லது நாளை மறுநாள் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பாட்னாவில் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. அதன்பிறகு புதிய அரசு எப்போது பதவி ஏற்கும் என்பது தெரியவரும்.
No comments:
Post a Comment