ம.தி.மு.க பொதுச்செயலாளார் வை.கோ வின் தாயார் இறந்த துயர சம்பவத்தை தொடர்ந்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு இரங்கல் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் நண்பர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவால் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பாரம்பரியமிக்க குடும்பத்தின் தலைவியாக திகழ்ந்த மாரியம்மாள் தனது மகன்களின் பொதுவாழ்க்கைக்கு துணையாக இருந்தார். கலிங்கப்பட்டி பகுதியில் அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படுபவராகவும், அனைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் மரியாதைக்குரியவராகவும் திகழ்ந்தவர். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களில் பெரும்பான்மையானோர் நெல்லை மாவட்டத்திற்கு செல்லும் போது அவரை சந்தித்து வாழ்த்து பெறுவது இயல்பாகும்.
தாயார் மாரியம்மாளின் மறைவு நண்பர் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். தாயாரை இழந்து வாரும் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மதிமுகவினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment