Saturday, 1 August 2015

தமிழகத்தில் மீண்டும் புரட்சி சசிபெருமாள் இறப்பை அடுத்து - டாஸ்மாக்கை அகற்றக்கோரி 500 பேருடன் களத்தில் இறங்கிய வைகோ தாயார்!

நெல்லை: டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் கலிங்கப்பட்டியில் 500 பேருடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். தள்ளாத வயதிலும் வைகோவின் தாயார் போராட்ட களத்தில் குதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது கலிங்கப்பட்டி கிராமம். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான இந்த கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மதுபான கடை அமைக்கப்பட்டதால் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிவதாக புகார் எழுந்தது. 

அத்துடன் இந்த சாலை வழியாக செல்பவர்களிடம் குடிமகன்கள் வரம்புமிறி பேசுவதாகவும், இதனால் பிரச்னை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த மதுபான கடையை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடந்த போராட்டத்தில் மது ஒழிப்பு போராளி சசிபெருமாள் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தின் எதிரொலியாக கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் இன்று ஒன்று திரண்டு தங்கள் ஊரில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். பொதுமக்களின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டக்களத்தில் இறங்க வைகோவின் தாயார் மாரியம்மாள் முன்வந்தார். தள்ளாத வயதிலும் போராட முன் வந்த அவரை வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரன் அழைத்துக் கொண்டு ராஜபாளையம்- கோவில்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
பொதுமக்கள் மதுக்கடையை மூடக்கோரி கோஷங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்ததால் அந்த பகுதியில் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நடந்த நிலையில் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி கொடுத்தாமல் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். போக்குவரத்தை சரிபடுத்துவதற்காக பொதுமக்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நீடித்து வருகிறது.


No comments:

Post a Comment